Vignesh shivan: லைகாவால் வறுத்தெடுக்கப்பட்டாரா விக்னேஷ் சிவன்.. அஜித்தின் AK 62 பட தாமதத்திற்கு காரணம் இதுதானா?
அஜித்குமார் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகவிருந்த, AK-62 திரைப்படம் தாமதமாகியுள்ளது ஏன் எனபது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
துணிவு பட வெற்றிக்குப் பிறகு ஏகே 62 படத்தை வரும் பிப்ரவரி மாதம் முதல் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணமும், விக்னேஷ் சிவன் தான் என கூறப்படுகிறது.
அஜித்திற்கு பிடிக்காத கதை?
துணிவு திரைப்பட பணிகள் முடிந்த பின்பு, அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் எனவும், பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதில் சந்தானம், அரவிந்த் சாமி மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிகக் உள்ளதாகவும் தகவல் வெளியானது. படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி 8 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், அண்மையில் அஜித்தை சந்தித்து விக்னேஷ் சிவன் கதையை விளக்கியுள்ளார். ஆனால், ”அந்த கதை தனக்கு பிடிக்கவில்லை, கதையை சரியாக தயார் செய்யுங்கள்” என அஜித் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவன் செய்த காரியம்:
அஜித் கதை பிடிக்கவில்லை என கூறிய பிறகும், அதை பொருட்படுத்தாமல் நேரடியாக லண்டனுக்கே சென்று, லைகா நிறுவன உயர்மட்ட அதிகாரிகளிடம் விக்னேஷ் சிவன் கதையை கூறியுள்ளார். அந்த கதையை பர்த்த தயாரிப்பு நிர்வாகமோ, 200 கோடி ரூபாய் செலவில் தயார் ஆக உள்ள இந்த படத்திற்காக, 8 மாதங்கள் நேரம் கொடுத்தும் இப்படி ஒரு கதையை தான் உங்களால் தயார் செய்ய முடிந்ததா என, காட்டமாக பேசியுள்ளது. எதேர்ச்சையாக, அந்த நேரத்தில் லண்டனில் இருந்த அஜித்குமாரையும் உடனடியாக நேரில் அழைத்த லைகா நிறுவனம், விவரத்தை எடுத்து கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு தான் தற்போதைக்கு அஜித்குமார் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் தயாராக இருந்த படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என, லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அட்லியுடன் அஜித் கூட்டணியா?
இதுதொடர்பான தகவல்கள் வெளியான சிறிது நேரத்திற்கு எல்லாம், அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படம் குறித்த தகவல்களால் சமூக வலைதளங்கள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன. அதன்படி ஏகே 63 படத்தை இயக்குனர் அட்லி இயக்கவுள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றொருபுறம் ஷேர்ஷா படம் மூலம் இந்திக்கு சென்று ஹிட் அடித்துள்ள அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் விஷ்ணுவர்தன் அல்லது சிறுத்தை சிவா அல்லது புஷ்பா பட புகழ் சுகுமார் ஆகியோருடன் அஜித் நடிப்பார் என பேசப்பட்டது.
அஜித் - மகிழ் திருமேனி கூட்டணி
இந்நிலையில், ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் மகிழ் திருமேனி இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் வெளியான கலக தலைவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. வலிமை பட தோல்விக்குப் பிறகு அஜித்-போனி கபூர்-ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியான ‘துணிவு’ படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து கலக்கல் ஹிட் அடித்துள்ளது. வசூலிலும் துணிவு படம் சாதனைகள் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.