34 years of Karakattakaran: 'மாங்குயிலே.. பூங்குயிலே..' 34 ஆண்டுகளை கடந்தும் நெஞ்சில் நிற்கும் கரகாட்டக்காரன்..!
ஒரு திரை ரசிகனின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் சரிசமமாக பூர்த்திசெய்ததில் சிக்ஸர் அடித்த கங்கை அமரனின் 'கரகாட்டக்காரன்' இன்றுடன் 34 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

அத்தி பூத்தாப்புல எப்போவாவது தான் ஒரு சில படங்கள் தமிழ் சினிமாவில் காலங்களை கடந்தும் நிலைத்து நிற்கும். அதில் ஏதோ ஒரு ஸ்பெஷல் இருக்கும். வேறு எந்த ஒரு படத்தாலும் அதை நிரப்பவோ ஈடுசெய்யவோ முடியாது. அப்படி பூத்த ஒரு படைப்பு தான் கரகாட்டக்காரன். இந்த பூ பூத்து இன்றுடன் 34 ஆண்டுகளை கடந்துவிட்டது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படத்திற்கு நிகராக ஒன்றை கொடுக்கவே முடியாது என்பதை சவாலாகவே எடுத்துக்கொள்ளலாம்.
எவர்கிரீன்:
கங்கை அமரன் இயக்க, இசைஞானி இசையமைக்க, கிராமத்து நடிகன் என்றாலும் அந்த காலத்து பெண்கள் மத்தியில் மன்மதன் ராமராஜன், கண்ணழகி கனகாம்பரம் கனகா நடிக்க, நகைச்சுவைக்கு கவுண்டமணி, செந்தில், கோவை சரளா கூட்டணி சேர தமிழ் சினிமா கண்ட ஒரு மாபெரும் திரைக்காவியம் தான் கரகாட்டக்காரன். இந்த படத்தை இன்று அல்ல என்று பார்த்தாலும் அதே ஃப்ரெஷ் பீல் கிடைக்கும். அது தான் கரகாட்டக்காரன் படத்தை இன்றும் எவர்கிரீன் படமாக வைத்திருக்கிறது. காதல், ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட், ஸ்வாரஸ்யம், இனிமையான பாடல்கள், பச்சைப்பசேல் பேக் கிரௌண்ட் என என்ன இல்லை இந்த படத்தில். ஒருமுறை அல்ல எத்தனை முறை பார்த்தாலும் ஒன்ஸ் மோர் கேட்க தூண்டும் சகல அம்சங்களும் நிறைந்த ஒரு படம். ஒரு திரை ரசிகனின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் சரிசமமாக பூர்த்திசெய்ததில் சிக்ஸர் அடித்து இருந்தார் கங்கை அமரன்.
பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பிய கரகாட்டக்காரன்:
கரகாட்டக்காரன் படத்தின் பட்ஜெட் என்னமோ சுமார் 35 லட்சம் என்றாலும் அது அடித்த வசூல் சும்மா பாக்ஸ் ஆபிஸையே அடித்து நொறுங்கியதாம். இன்றைய காலகட்டத்தில் 30 நாட்கள் கூட படம் திரையரங்குகளில் தாக்குபிடிக்காமல் ஓடிவிடும் நிலையில் 34 ஆண்டுகளுக்கு முன்னர் 385 நாட்கள் திரையரங்கங்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகள் தான் என்பது பிரமிப்பாக உள்ளது. அதை கடந்து சுமார் 485 நாட்களுக்கும் மேலாக படம் சக்கை போடு போட்டது. அதன் ஆதாரமாக போஸ்டர்கள் நகரங்களை எங்கும் அலங்கரித்தன. மிக பெரிய திரை ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்றவர்களின் படங்களை காட்டிலும் கரகாட்டக்காரன் வசூல் மழையை குவித்தது என்றால் அது மிகையல்ல.
கரகாட்டக்காரன் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். மாங்குயிலே பூங்குயிலே, ஊரு விட்டு ஊரு வந்து, இந்த மான் உந்தன் சொந்த மான், மாரியம்மா மாரியம்மா, குடகு மலை என இன்றும் பிளே லிஸ்டில் இடம் பெரும் ஆல் டைம் ஹிட்ஸ் லிஸ்டில் உள்ளன. பாரம்பரிய கலையான கரகாட்டத்திற்கு சிம்மாசனத்தை பெற்றுக்கொடுத்த படம் கரகாட்டக்காரன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

