‛மணிரத்னம் படங்கள் எனக்கு பிடிக்காது’ ஓப்பனாக கூறிய பிரபல தெலுங்கு இயக்குநர்!
அவர் படங்கள் எதுவும் எனக்கும் பிடிக்காது. ஆனால் ஒரு முறை நாங்கள் இருவரும் ஒரு ஸ்கிரிப்ட் டிஸ்கஷனில் ஒன்றாகக் கலந்து கொண்டோம். அப்போது நான் பேசுவதை அவர் காது கொடுத்து கேட்கவில்லை.
ராம் கோபால் வர்மா பிரபல தெலுங்கு இயக்குநர். சமீபத்தில் தனியார் சேனலின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ராம் கோபால் வர்மா, இயக்குநர் மணிரத்னம் குறித்து ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் படங்கள் எனக்கு பிடிக்காது !
நேர்காணலின் போது தொகுப்பாளர் மணிரத்னம் உடனான உங்களது சிறந்த நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ராம் கோபால் வர்மா, பொதுவாக மணிரத்னத்திற்கு என் படங்கள் எதுவும் பிடிக்காது. அதேபோல் அவர் படங்கள் எதுவும் எனக்கும் பிடிக்காது. ஆனால் ஒரு முறை நாங்கள் இருவரும் ஒரு ஸ்கிரிப்ட் டிஸ்கஷனில் ஒன்றாகக் கலந்து கொண்டோம். அப்போது நான் பேசுவதை அவர் காது கொடுத்து கேட்கவில்லை. அவர் பேசுவதை நானும் காது கொடுத்து கேட்கவில்லை. ஆனால் திருடா திருடா படத்தின் திரைக்கதையில் எங்கள் இருவரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழில் 1993 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் திருடா திருடா. இந்த திரைப்படத்தின் திரைக்கதை மணிரத்னம் மற்றும் ராம் கோபால் வர்மா ஆகியோருடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்னைத் தவிர யாராலும் முடியாது !
மேலும் யாராலும் இதை எடுக்கவே முடியாது என்று நினைக்கும் அளவிற்கு நீங்கள் எடுத்த ஒரு பாடலோ சீனோ கூறுங்கள்.. என்று தொகுப்பாளர் கேட்க, அதற்கு ராம் கோபால் வர்மா "என்னைவிட ஒரு பெண்ணை அழகாக யாராலும் திரையில் காட்ட முடியாது" என்று பதில் அளித்தார்.
ராம் கோபால் வர்மா பின்னணி
பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா தெலுங்கு திரைப்படத் துறையில் தனது முதல் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். இளையராஜா இசையமைத்து 1989 ஆம் ஆண்டு சிவா திரைப்படம் தெலுங்கில் வெளியிடப்பட்டது. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்து, பின்னர் இத்திரைப்படம் இதே பெயரில் இந்தியில் மறுஆக்கம் செய்யப்பட்டு 1990 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் இத்திரைப்படம் உதயம் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியானது.
பின்னர் வர்மாவின் இரண்டாவது திரைப்படம் வெங்கடேஷ் மற்றும் ஸ்ரீதேவி நடித்த க்ஷானா க்ஷானம் தெலுங்குத் திரைப்படம் வெற்றியடைந்ததன் விளைவாக இந்தியில் ஹெராண் என்றத் தலைப்பில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.அதன் பின் வர்மா ரக்தா சரித்ர என்ற திரைப்படத்தை 2010ல் தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிட்டார். இந்தியில் முதல் பாகமும் இரண்டாம் பாகம் தமிழிலும் வெளியானது. தமிழில் ரத்த சரித்திரம் திரைப்படத்தில் சூர்யா , விவேக் ஒபரோய் மற்றும் பிரியாமணி நடித்திருந்தனர்.
1995 ஆம் ஆண்டு ஆமிர் கான் மற்றும் ஊர்மிளா நடித்து, ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் வெளிவந்த ரங்கீலா திரைப்படம், மற்றும் 1998 ஆம் ஆண்டு வெளியான சத்யா ஆகிய திரைப்படங்கள் இந்தி சினிமாவில் வர்மாக்கு மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்