Rajinikanth Health: அமெரிக்கா புறப்பட்ட ரஜினி: தாமதமான சிகிச்சையும்... தனுஷ் உடன் சந்திப்பும்!
கொரோனா பரவியதால் உலகநாடுகள் அனைத்தும் வெளிநாட்டு பயணிகளின் வருகையை தடை செய்திருந்தன. அதன் காரணமாக, ரஜினிகாந்த் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள முடியவில்லை.
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் பேரன்களும் சென்றுள்ளனர். மூன்று வாரங்கள் அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை முடித்துத் திரும்புகிறார்.
எல்லாம் 2011ல் தான் ஆரம்பித்தது..
கடந்த 2011ம் ஆண்டு தான் ரஜினிகாந்துக்கு முதன்முதலாக உடல்நிலை சற்று கவலைதரும் வகையில் பாதிக்கப்பட்டது. அப்போதுதான் அவர் ரா ஒன் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்து முடித்திருந்தார். அத்துடன் உடல்நலன் குன்றவே, முதலில் சென்னை போரூர் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக பாதிப்பு அவருக்கு உறுதியானது. சிலகாலம் அங்கேயே தங்கியிருந்தார். ஆனால், மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் அங்கிருந்து சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவ மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். இது ஆசியாவின் மிகச் சிறந்த மருத்துமனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து அம்மருத்துவமனை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதால் பல்வேறு வதந்திகளும் பரவின. இதனால், மருத்துவச் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பு ரஜினி பேசி பதிவு செய்த சிறிய உரையை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணையத்தில் வெளியிட்டார்.
உருக்கமா பேசிய ரஜினி!
அதில், "என் மேல நீங்க இவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க, உங்களுக்கு நான் திரும்ப என்ன செய்யப்போறேன்? எனக்கு கடவுள் அருள் இருக்கு, நான் இப்ப ஜாலியா கிளம்புறேன், சீக்கிரமே திரும்பித் வருவேன்," என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார். அவரின் பேச்சுதான் பல்வேறு வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. மேலும், அடுத்த சூப்பர்ஸ்டார் என்று எழுந்த சலம்பல்களையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. சிகிச்சை முடிந்து திரும்பியவுடன் 2014ல் கோச்சடையான் அனிமேஷன் படத்தில்தான் அவர் நடித்தார். அதனால் இனிமேல் அவர் நடிக்க மாட்டார் என்ற வதந்திகளும் கிளம்பின. ஆனால், அதன்பின் லிங்கா படத்தில் நடித்தார். தொடர்ச்சியாக தற்போதுவரை நடித்து வருகிறார்.
அமெரிக்காவில் அறுவை சிகிச்சை
சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பின் இயல்பாகவே இருந்துவந்த அவருக்கு மீண்டும் 2016ல் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். அவருக்கு அவரது இளைய மகள் செளந்தர்யா சிறுநீரகம் தானமாகக் கொடுத்ததாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் இருக்கின்றன. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவுக்குச் சென்று உடல் நிலை குறித்து பரிசோதனை செய்துகொள்கிறார்.
கடைசியாக, 2019-ம் ஆண்டு அமெரிக்கா சென்று அவரது உடல்நிலை குறித்து பரிசோதனை செய்துகொண்டார். ஆனால், அதன்பிறகு கொரோனா பரவியதால் உலகநாடுகள் அனைத்தும் வெளிநாட்டு பயணிகளின் வருகையை தடை செய்திருந்தன. அதன் காரணமாக, ரஜினிகாந்த்தால் கடந்த ஆண்டு அமெரிக்கா சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள முடியவில்லை. இந்நிலையில், இன்று அவர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
குடும்பத்துடன் தங்கும் திட்டம்!
'தி கிரே மேன்' படப்பிடிப்புக்காக ஏற்கெனவே அமெரிக்கா சென்றுள்ள தனுஷ், கொரோனா பரவல் காரணமாக அங்கேயே தங்கியிருக்கிறார். இந்நிலையில், அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்துடன் அவருடைய மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ், பேரன்கள் இணைந்துகொண்டுள்ளனர். குடும்பத்துடன் ஓய்வெடுத்தே திரும்புவார் எனத் தெரிகிறது. ரஜினிகாந்த் நலம் பெற்ற திரும்ப அவரது ரசிகர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர்.