R.K. Suresh Metoo: பெண்களுக்கு மட்டுமல்ல;ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும்: ஆர்.கே.சுரேஷ்
R.K. Suresh Metoo: ஹீரோயின், கோ-ஆர்ட்டிஸ்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என எந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவசியம். அதே போல ஆண் நடிகருக்கும் பாதுகாப்பு அவசியம்.
மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கடந்த வாரம் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து ஒட்டுமொத்த திரையுலகத்திலுமே அது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இது தொடர்பாக அவரவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தயாரிப்பாளராக இருந்து நடிகரான ஆர். கே. சுரேஷ் தற்போது "காமா" என்ற படத்தில் கமிட்டாகி உள்ளார். அப்படத்தின் பூஜை நடைபெற்ற போது செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கு பதிலளித்து இருந்தார். அப்போது அவரிடம் மலையாள திரையுலகில் தற்போது பூதாகரம் எடுத்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த அவரின் கருத்து கேட்கப்பட்டது.
அது தொடர்பாக அவர் பதில் அளிக்கையில் "மலையாளத்தில் ஏற்கனவே நான் ஒரு நாலு படம் பண்ணி இருக்கேன். இப்போது கூட இரண்டு மலையாள படத்தில் நடிச்சுக்கிட்டு இருக்கேன். இது அங்கு மட்டும் இல்ல எந்த திரையுலகமாக இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. மலையாளத்தில் தற்போது நடைபெறும் பிரச்சினைக்கு காரணம் 2016ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவம். பல ஆர்ட்டிஸ்ட் அதில் சம்பந்தப்பட்டவர்கள் என கூறப்படுகிறது. அது குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்ற ஒரு பிரச்சினை எழுந்தது. நடிகர் விஷால் தலைமையில் கமிட்டி ஒன்று வைத்து விசாரிக்கப்பட்டது. நானும் அப்போது நடிகர் சங்கத்தில் இருந்தேன். இன்றும் அந்த கமிட்டி செயல்பட்டு வருகிறது. தயாரிப்பாளர் சங்கத்திலும் பெண்களின் பாதுகாப்புக்கு உண்டான ஒன்று உள்ளது. பெண்களின் பாதுகாப்பு என்பது ரொம்ப முக்கியம்.
சிலர் அட்ஜஸ்ட்மென்ட், சில விஷயங்கள் என சொல்றாங்க. இப்படி பல விஷயங்கள் இருக்கும். முதலில் ஒத்துக்கொண்டு பின்னர் அதையே குறையாக சொல்லும் விஷயங்களும் இருக்க கூடும். எப்படியாக இருந்தாலும் அது ரொம்பவே தப்பான விஷயம். ஹீரோயின், கோ-ஆர்ட்டிஸ்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என எந்த பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவசியம்.
மலையாளத்தை பொறுத்தவரையில் பெரிய நடிகர்கள் பெயரும் இதில் அடிபடுவதால் அதற்கான தனி கமிட்டி ஆரம்பித்து தக்க விசாரணை நடத்தி இனி இது போல ஒரு தவறு நடக்காமல் இருப்பதற்கும் நடந்த தவறுக்கு தக்க தண்டனையும் வழங்கப்படுவதற்கான விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கிறது.
படம் என பூஜை போடுவாங்க, படம் ஆரம்பிக்கற மாதிரி ஆரம்பிப்பாங்க, சில அட்ஜஸ்ட் வேலைகள் எல்லாம் நடக்கும் அதற்கு பிறகு பைனான்ஸ் பிரச்சினை என சொல்லி படம் ட்ராப் ஆகும். அது ஒரு சில சமயங்களில் உண்மையிலேயே பைனான்ஸ் பிரச்சினையாகவும் இருக்கும் அல்லது ஒரு சில விஷயங்களுக்காகவும் இருக்கலாம். இது போன்ற விஷயங்களை என்கரேஜ் பண்ணாதீங்க என்பதை தான் விஷால் அன்று உப்புமா கம்பெனியை நம்பி ஏமாறாதீர்கள் என சொல்ல வந்தார். ஆனால் இன்று அவர் செருப்பால் அடிப்பேன் என சொன்னது நல்ல விஷயம் தானே. அதையும் இதையும் ஒன்றாக இணைந்து பேச வேண்டாம்.
பெண் நடிகர்களுக்கு மட்டுமல்ல ஆண் நடிகர்களுக்கும் பாதுகாப்பு அவசியம். சில நேரங்களில் பொய்யான புகாரால் நடிகர்கள் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த இமேஜ் பாதிக்கப்படும். ஒரு சிலர் உண்மையிலேயே தவறு செய்து இருக்கலாம் ஆனால் ஒரு சிலர் எந்த தவறும் செய்யாமல் கூட இருக்கலாம் இல்லையா. அதனால் கமிட்டி தான் அது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என பேசி இருந்தார்.