Jana Nayagan: ஜனநாயகன் பிரச்னை.. ஒதுங்கி நிற்கும் சினிமா துறை.. காரணம் இதுதான்!
ஒரு படம் சமூகத்தைப் எந்தளவு பாதிக்கும் என்பதை பொறுத்து தான் தணிக்கை அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்கிறார்கள். பிரச்னை இருந்தால் படத்தை நிறுத்துகிறார்கள் என ஜனநாயகன் விவகாரம் குறித்து முரளி ராமசாமி கூறியுள்ளார்.

ஜனநாயகன் பட பிரச்னையில் மிகப்பெரிய பாதிப்பு அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தான் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான தேனாண்டாள் முரளி ராமசாமி தெரிவித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “ஜனநாயகன்”. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ போன்றோர் நடித்துள்ள இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜனநாயகன் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்துள்ளது. இதில் நாளை (ஜனவரி 9) தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இப்படியான நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான தேனாண்டாள் முரளி ராமசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஜனநாயகன் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “தணிக்கைக்குழு மத்திய அரசு தொடர்புடையது. ஒரு மாதம் முன்னாடியே பேன் இந்தியா அளவில் ரிலீஸ் செய்யப்படும் படங்கள் தணிக்கை சான்று பெற அனுப்பப்படுகிறது. இந்த தணிக்கைக் குழுவில் அடிக்கடி நடைமுறைகள் மாற்றப்படுகிறது. இதனால் ஆரம்ப காலத்தில் சிரமம் ஏற்படுகிறது. நேர சூழ்நிலை காரணமாக படக்குழு திணறுகிறது. சென்சார் சான்றிதழ் வந்தால் தான் முன்பதிவு தொடங்க முடியும். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்ய ஒவ்வொரு சட்ட முறை உள்ளது. உதாரணமாக சிங்கப்பூர் என்றால் 21 நாட்கள் முன்பே தணிக்கை சான்றிதழ் பெற வேண்டும்.
ஒரு படம் சமூகத்தைப் எந்தளவு பாதிக்கும் என்பதை பொறுத்து தான் தணிக்கை அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்கிறார்கள். பிரச்னை இருக்கும் பட்சத்தில் படத்தை நிறுத்தி வைக்கிறார்கள். இதில் தயாரிப்பாளருக்கு பெரிய பாதிப்பு இருக்கிறது. உண்மையை சொல்லப்போனால் தணிக்கைத்துறைக்கும், ஜனநாயகன் பட நிறுவனம் இடையே மெயில் வழியாக மட்டுமே தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் பட பிரச்னை என்பது முழுதாக தெரியாது. இதில் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அரசு முன்னெடுக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.
இது சினிமா துறை சார்ந்த பிரச்னை இல்லை. அப்படி இருந்தால் சங்கம் சார்பில் பேசுவோம். இது ஒரு படத்துக்கான பிரச்னை. தனிப்பட்ட பிரச்னை என்பதால் இந்த விஷயத்தில் நாங்கள் கோரிக்கை விடுப்போம். இதில் மிகப்பெரிய பாதிப்பு தயாரிப்பாளருக்கு தான் இருக்கிறது. நாங்கள் விஜய்யை பற்றி பேசவில்லை.
நானும் விஜய்யை வைத்து மெர்சல் படம் பண்ணினோம். இதே சென்சார் பிரச்னை வந்தது. என்ன பிரச்னை என்பது அனைவருக்கும் தெரியும். சென்சார் போர்டு சும்மா ஒரு படத்தை நிப்பாட்டி விட முடியாது. அதை அவர்கள் வெளியே உடனே சொல்ல முடியாது. எப்போதும் சென்சார் கமிட்டி பரிந்துரை செய்த அளிக்கப்பட்ட படத்தின் காப்பி தணிக்கை வாரியத்திடம் இருக்கும்” என தேனாண்டாள் முரளி ராமசாமி கூறியுள்ளார்.





















