Karthik: போதை ஊசியா? ஷூட்டிங் வராத கார்த்திக்? கடுப்பான மாணிக்கம் நாராயணன்!
பி.வாசு என்னிடம் காமெடி படம் எடுக்கலாம் என சொன்னார். ஆனால் மலையாளத்தில் வெளியான படத்தை சீனுவாக மாற்றினோம். நான் தான் அந்த படத்தை பி.வாசுவிடம் பரிந்துரைத்தேன்.
தான் தயாரித்த சீனு படத்தில் நடிகர் கார்த்திக்கால் ஏற்பட்ட பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு கார்த்திக், மாளவிகா, விவேக், பி.வாசு, தியாகு, காக்கா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “சீனு”. இது மலையாளத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான பாரதம் படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை செவன்த் சேனல் கம்யூனிகேஷன் சார்பில் மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்தார். அண்ணன் - தம்பி இடையயேயான இசை போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் தமிழில் படுதோல்வி அடைந்தது.
பி.வாசு என்னிடம் காமெடி படம் எடுக்கலாம் என சொன்னார். ஆனால் மலையாளத்தில் வெளியான படத்தை சீனுவாக மாற்றினோம். நான் தான் அந்த படத்தை பி.வாசுவிடம் பரிந்துரைத்தேன். முக்கியமான கேரக்டரில் மம்மூட்டி, சிவகுமார் என யாரையாவது கேட்போம் என சொல்லி விட்டேன். அது பெரிய தவறு என்பது பின்னாளில் தான் புரிந்தது. கார்த்திக்கின் அண்ணன் கேரக்டரில் நடிக்க இருவரிடமும் கேட்டேன். அவர்கள் மறுத்து விட்டார்கள். இதற்கிடையில் பி.வாசு நடிப்பதற்கு தயாரானார். ஆனால் அதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை. நான் பதிலும் எதுவும் பேசவில்லை.
அந்த படத்தில் கார்த்திக் எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக அமைந்தார். போதை ஊசி போட்டுக்கொண்டு ஷூட்டிங்கிற்கு வராமல் இருந்தார். அந்த படம் முடிந்ததும் எல்லாரும் டப்பிங் பேசி விட்டார். கார்த்திக்கை போய் பார்த்தும் அவர் வர மறுத்து விட்டார். நான் ரொம்ப டென்ஷன் ஆயிட்டேன். கார்த்திக்கிற்கு படம் ஷூட்டிங்கிற்கு ஒரு வாரம் முன்னால் வெள்ளி தட்டில் வைத்து ரூ.45 லட்சம் மொத்தமாக கொடுத்தேன். ரிலீஸூக்கு 20 நாட்கள் தான் இருக்கு. என்ன பண்ணலாம் என புரியாமல் இருந்தது.
நான் போன் பண்ணி கார்த்திக்கிடம் பேசினேன். எனக்கு படம் ஓடுமா இல்லையான்னு தெரியல , ஆனால் நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறேன். அது உன்னால் கெட வேண்டுமா என கேட்ட பிறகு டப்பிங் பேச வந்தார். நானும் என்னுடைய நண்பரும் சீனு படத்தை பார்க்கிறோம். ஒவ்வொரு காட்சியும் பார்க்க பார்க்க எனக்கு இதயமே வெடிப்பது போல இருந்தது. அந்த அளவுக்கு குப்பையாக இருந்தது. ஒழுங்கான கதையை சொதப்பியிருந்தார்கள். இந்த படம் ஓடினால் ஒரு பக்கம் காதை அறுத்து கொள்கிறேன் என சொன்னேன். ஆனால் அந்த படம் ஓடவே இல்லை என்றார்.
மேற்காணும் விஷயங்கள் நேர்காணலில் சொல்லப்பட்டவை மட்டுமே.