Premalatha Vijayakanth: இது சினிமா இல்ல, அட்வைஸூக்கு நன்றி.. இயக்குநர் பாண்டிராஜை தாக்கிப்பேசிய பிரேமலதா விஜயகாந்த்!
”கட்சிக்காரர்கள் அத்தனை பேரும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தட்டிவிட்டால் பத்திக்கும். மிஸ்டர் பாண்டிராஜிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். ஏதோ ஒரு பதிவு போடணும் என்பதற்காக பதிவிடாதீர்கள்” - பிரேமலதா
விஜயகாந்தை கஷ்டப்படுத்த வேண்டாம் எனப் பேசிய இயக்குநர் பாண்டிராஜை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth) கடுமையாக சாடியுள்ளார்.
வருத்தம் தெரிவித்த பாண்டிராஜ்
சென்னை திருவேற்காட்டில், தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய தேமுதிக தலைவர், நடிகர் விஜயகாந்த் இந்தக் கூட்டத்திற்கு அழைத்துவரப்பட்டார்.
மேலும், விஜயகாந்த் இந்தக் கூட்டத்தில் சரிந்துவிழப் போன நிலையில், அவரை தேமுதிக தொண்டார்கள் தாங்கிப் பிடித்தனர். இந்த வீடியோ முன்னதாக இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த வீடியோவைப் பார்த்து மனம் வருந்திய இயக்குநர் பாண்டிராஜ், “கேப்டன் விஜய்காந்த் அவர்களுக்கு இப்பொழுது சரியான ஓய்வு தேவை. அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ்... பிடித்த ஒரு ‘நல்ல மனிதரை ‘ இப்படி பார்க்க ரொம்பவே கஷ்டமா இருக்கு” என இயக்குநர் பாண்டிராஜ் பதிவிட்டிருந்தார்.
சீறிய பிரேமலதா
மற்றொருபுறம், கடந்த மாதம் தொடங்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விஜயகாந்தின் உடல்நிலை பற்றி தொடர்ந்து பல்வேறு வதந்திகள் இணையத்தில் பரவி வந்தன. இந்நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை பற்றிய வதந்திகள் முதல் இயக்குநர் பாண்டிராஜின் கருத்து வரை அனைத்துக்கும் பிரேமலதா விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.
தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ள பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பதாவது:
“கேப்டனின் முதுகில் குத்திவிட்டுப் போனதுதான் முதல் சரிவு. துரோகம் என்பது தான் வாழ்க்கையில் கொடுமையான விஷயம். அதுதான் அவரது உடல்நிலை பாதித்ததற்கு காரணம். கேப்டன் தன்னுடைய வேதனையை யாரிடமும், என்னிடமும் கூட பகிர்ந்துகொள்ள மாட்டார்.
ஆனால் என்னவெல்லாம் போடக்கூடாதோ அவை அனைத்தையும் யூட்யூபில் போட்டீர்கள். பதிவிடுங்க. ஆனால் வெண்டிலேட்டரில் இருக்கிறார், செயற்கை சுவாசம் என என்னென்னவோ பதிவிடுகிறீர்கள். அவர் இல்லைனே பல யூட்யூப் சானல்களில் போட்டார்கள்.
‘உங்க அட்வைஸூக்கு நன்றி..’
ஒரு மனைவியாக அது எனக்கு எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்தும்? செயற்குழு, பொதுக்குழுவுக்கு வரமாட்டார். அவர் இல்லை என்றீர்களே.. ஆனால் வந்தாரில்ல? கட்சி வேட்டி கட்டிக் கொண்டு வந்து உட்கார்ந்தார். நாலுக்கு நாலு ரூமில் இப்படி ஒரு கேமராவை வைத்துக் கொண்டு எதைப் பற்றி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது கிடையாது.
கட்சிக்காரர்கள் அத்தனை பேரும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தட்டிவிட்டால் பத்திக்கும். மிஸ்டர் பாண்டிராஜிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். ஏதோ ஒரு பதிவு போடணும் என்பதற்காக பதிவிடாதீர்கள். இது சினிமா கிடையாது, கட்சி. எங்களுக்குத் தெரியும் எப்படி அவரை பாத்துக்கணும் என்று. உங்க அறிவுரைக்கும், இலவச அட்வைஸூக்கும் நன்றி மிஸ்டர் பாண்டியராஜன்” எனப் பேசியுள்ளார்.