Parthiban: “அஜித்தை கொண்டாடினாங்க; என்னை ஓரமா நில்லுன்னு சொன்னாங்க”: சினிமா எண்ட்ரி குறித்து பார்த்திபன்!
தான் நடிகராக நினைத்தபோது அதற்கான பாதை அவ்வளவு எளிதானதாக அமையவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் பார்த்திபன்.
தான் நடிகராக நினைத்தபோது அதற்கான பாதை அவ்வளவு எளிதானதாக அமையவில்லை என்று கூறியுள்ளார் நடிகர் பார்த்திபன்.
என்றுமே வித்தியாசத்திற்கு பெயர் பெற்றவர் இயக்குநரும் நடிகருமான இராதாகிருஷ்னன் பார்த்திபன். இவர் தான் நடிக்கும் கதாபாத்திரமோ, இயக்கும் சினிமாவோ அதில் தனது தாக்கத்தினை ஏற்படுத்தாமல் இருக்க மாட்டார். எப்போதும் ஒரு இயல்பான கதைக்களத்தினை யாரும் சொல்லாத கோணத்தில் சொல்லக் கூடிய இவர், தற்போதெல்லாம் வித்தியாசமான தொழில்நுட்ப முறையில் தனது படங்களை இயக்கிக் கொண்டு இருக்கிறார்.
ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தில், படம் முழுவதும் ஒரே கதாபாத்திரம் மட்டும் திரையில் தோன்றும் படியும், மற்ற கதாபாத்திரங்களை குரலாக மட்டுமே கொண்டு இயக்கி நடித்தார். இந்த திரைப்படம் பார்த்திபன் ரசிகர்களிடையே மட்டுமில்லாமல், சினிமா ரசிகர்களிடையேவும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.
அந்த வரிசையில் இரவின் நிழல் படத்தினை, உலகின் முதல் நான் லேயர் சிங்கிள் ஷாட் படமாக எடுக்கப்போவதாக அறிவித்தார். சுமார் 90 நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்தப் படத்தினை சிங்கிள் ஷாட்டில் எடுத்து உலகையே தமிழ் சினிமாவின் பக்கமும், தனது பக்கமும் திருப்பியுள்ளார்.
படம் ஜூலை 15ல் வெளியாகவுள்ள நிலையில் நடிகர் பார்த்திபன் ஒரு யூடியூப் சேனலில் பல்வேறு தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “நான் நடிகனாக நினைத்தபோது அதற்கான பாதை அவ்வளவு எளிதானதாக இல்லை. அஜித் ஒரு பைக்கில் போய் சான்ஸ் கேட்டால் அட்டடே இவர் நடிகர் மாதிரி இருக்காறே என நினைத்தார்கள். நான் நடிகனாக சான்ஸ் கேட்டுச் சென்றபோது அப்படி ஓரமா நில்லு என்றுதான் சொன்னார்கள். என் திறமையை யாரும் கண்டுகொண்டதே இல்லை. ஆனால் எனக்குள் ஒரு திறமை இருப்பதை நான் உணர்ந்தேன். அது ஒரு கங்காக என்னுள் இருந்தது. புதிய பாதை என் திறமையை நிரூபிக்க உதவியது. நம்ம திறமையை மத்தவங்க மதிக்கும் அளவுக்கு நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படித்தான் நான் ஜெயித்தேன். அசாத்தியமான உழைப்பைப் போட்டேன்.
10 வருடங்களுக்கு முன்பே இந்த படத்தின் கனவு மனசுக்குள் வந்தது. ஆனால் அதை எப்படி நனவாக்குவது என்பது தெரியாமல் இருந்தது. ஆனால் இதை எடுப்பதற்கான துருப்புச் சீட்டு தான் ஒத்த செருப்பு. அந்தப் படத்தை நான் தியேட்டரில் ரிலீஸ் பண்ணேன். ஆனால் அதை உலக அரங்கில் கொண்டு சேர்த்து அங்கு அங்கீகாரம் வந்த பின்னர் தான் இங்கு கொண்டாடினார்கள். இத்தனைக்கும் நான் இங்கு எல்லோரையும் கையைப்பிடிச்சு இழுக்காத குறையாக ஒத்த செருப்பு படத்தைப் பார்க்கச் சொன்னேன். நெட்ஃப்ளிக்ஸில் வந்தபின்னர் தான் இங்கே கொண்டாடினார்கள். ஒரு வித்தியாசமான ஸ்க்ரிப்ட் மீது நம்பிக்கை வரவழைப்பது பெரிய விஷயமாக உள்ளது. இந்தப் படத்தில் தான் அதிகபட்ச கேமரா அசிஸ்டன்ட், அதிகபட்ச ஆர்டிஸ்ட், அதிகபட்ச உதவி இயக்குநர்கள் வேலை செய்துள்ளனர்.
எல்லோரின் உழைப்பின் விளைவுதான் இரவின் நிழல் படம். எனக்கு எப்போதுமே எதிர்நீச்சல் அடிப்பது ரொம்பவே பிடிக்கும். தடைகள் நிறைய இருக்கும் தடைகளைத் தாண்டி வருவதுதான் சுவாரஸ்யம். ரஹ்மான் சாருடன் நான் இந்த ஒருபடம் செய்தது 100 படம் செய்ததற்கு சமம். அவருக்கும் இது அப்படியிருக்கும். மல்லிகைப் பூவில் வாசம் இருந்தாலும் கூவிக்கூவி விற்க வேண்டும். அப்படித்தான் என்னைப் போன்ற வித்தியாசப் படங்களை எடுப்பவர்களின் நிலை. நான் வித்தியாசமான கதைகளுக்கு அப்படி நிறைய மெனக்கிடுகிறேன். ஓட்டு வாங்க குடிசைக்குள் சென்று கூழ் குடிப்பதுபோல் தான் நான் இரவின் நிழலுக்காகப் பேசிக் கொண்டிருக்கிறேன். எனது வெற்றிகளை வைத்து என்னைக் கணக்கிடாதீர்கள். என் தோல்விகளை வைத்து என்னை கணக்கிடுங்கள். இது ஆப்ரகாம் லிங்கனின் கூற்று. அதைத் தான் நான் செய்கிறேன். நீங்க உங்கள் மேல் வைக்கும் நம்பிக்கை உங்களை எந்த நிலைக்கு வேண்டுமானாலும் உயர்த்தும்.
ரஹ்மானின் இசை புனிதம் செய்துள்ளது. முதல் சில நிமிடங்களில் வரும் இசை உங்களை மெஸ்மெரைஸ் செய்துவிடும்”
இவ்வாறு அவர் கூறினார்.