Parithabangal Dravid: பெண் வேடத்தில் நடிக்க இவங்கதான் காரணம்.. சினிமா புதுசா இருக்கு.. பரிதாபங்கள் டிராவிட் பேட்டி
பெண் வேடத்தில் நடிப்பதற்கு இவர்கள் தான் காரணம் என பரிதாபங்கள் டிராவிட் தெரிவித்துள்ளார்.

பரிதாபங்கள் யூடியூப் சேனலை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. அவ்வப்போது நடக்கும் சமூக அவலங்களை தோலுரித்து காட்டும் வகையில் கோபி, சுதாகர் டீம் வீடியோவை வெளியிடுவார்கள். சமீபத்தில் வெளியான சொஷைட்டி பாவங்கள் வீடியோ மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. பலரது பாராட்டையும் பெற்றது. எதிர்ப்புகள் இருந்தாலும் அதனை பற்றி கவலைப்படாமல் தங்களது பணியை கோபியும், சுதாகரும் செய்து வருகிறார்கள். அதேபோன்று இவர்களோடு இணைந்து டிராவிட்டும் பல வீடியோக்களின் மக்களின் கவனத்தை பெற்றுள்ளார்.
பரிதாபங்கள் டிராவிட் என்றால் அவரது கதாப்பாத்திரம் மட்டும் தனியாக தெரியும் அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். வீட்டில் நடக்கும் சம்பவங்களையும், நாட்டு நடப்புகளையும் வைத்து வெளியாகும் வீடியோக்களில் டிராவிட் இல்லாமல் கோபி, சுதாகரும் நடிப்பது இல்லை. டிராவிட் பெண் வேடமிட்டு கணவருக்கு தொல்லை தரும் மனைவியாக நடித்து காமெடி கலந்து ரசிக்க வைத்து வருகிறார். கோபி, சுதாகரை போன்று தற்போது டிராவிட்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் டியூட் மற்றும் அர்ஜூன் தாஸ் நடிக்கும் ஒன்ஸ்மோர் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், பரிதாபங்கள் டிராவிட் அளித்திருக்கும் பேட்டியில் தனது சினிமா பயணம் குறித்து தெரிவித்திருக்கிறார். அதில், சிறு வயதில் இருந்தே கவிதை எழுதுவது, கதை எழுதுவது பிடிக்கும் அப்படித்தான் இங்கு வந்தேன். பரிதாபங்கள் டிராவிட் நிலையான அடையாளம் கிடைத்திருக்கிறது. படத்தில் நான் நடிப்பது குறித்த செய்தி வந்ததும் கோபியும், சுதாகரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. நம்ம டீமில் இருந்த பையன் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்து நடிக்கிறான் என்பதை ரொம்ப பெருமையா பார்த்தாங்க.
நான் நடித்திருக்கிற ஒன்ஸ்மோர் படம் பார்த்தா பரிதாபங்கள் டிராவிட்டே கிடையாது. மொத்தமா அது வேற முகமாக இருக்கும். மாமனா, மச்சானா, சித்தப்பா எல்லா மாதிரி பார்ப்பாங்க. அந்த மாதிரி கதாப்பாத்திரமாக இருக்கும். பரிதாபங்கள் நிகழ்ச்சியில் பெண் வேடமிட்டு நடிப்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. என் அக்கா, தங்கச்சி, அம்மா வீட்டில் பேசுவதை தான் அப்படியே பேசுனேன். அவங்க கிட்ட இருந்து கற்றுக்கொண்டது தான். அடுத்தடுத்து நல்ல நல்ல வாய்ப்புகள் வந்தால் சிறப்பாக நடிப்பேன் என டிராவிட் தெரிவித்திருக்கிறார்.




















