Angelina Jolie: வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தேன்.. ஏஞ்சலினா ஜோலி பரபரப்பு ஸ்டேட்மெண்ட்!
இந்த உலகத்தில் வேறு எந்த இடத்தைக் காட்டிலும் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லாத ஒரு இடமாக ஹாலிவுட் மாறியுள்ளதாக கூறியுள்ளார் உலக அழகி ஏஞ்சலினா ஜோலி
ஏஞ்சலினா ஜோலி
1982 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் ஏஞ்சலினா ஜோலி. இதற்கு பிறகு இவரது அழகும் நடிப்பும் உலகத்தின் கடைக்கோடி வரை பாராட்டப்பட்ட கதையை நாம் அறிவோம். ஹாலிவுட்டின் முடிசூடா அரசியாக வலம் வந்த ஏஞ்சலினா ஜோலி, பல்வேறு போர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருகிறார்.
மேலும் போரினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ‘ஃபர்ஸ்ட் தே கில்டு மை ஃபாதர்’ என்ற திரைப்படத்தை இயக்கி உலக அளவில் பாராட்டுக்களைப் பெற்றார். தன்னுடன் நடித்த சக நடிகரான பிராட் பிட்டை திருமணம் செய்து கொண்ட ஏஞ்சலினா ஜோலி, கம்போடியா நாட்டைச் சேர்ந்த மேட்டாக்ஸ் என்கிற மகனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
கருத்து வேறுபாடுகள் காரணமாக பிராட் பிட் உடனான தன்னுடைய திருமண உறவை கடந்த 2017ஆம் முடித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களின் கவனமும் அவர் பக்கம் திரும்பியது. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஒரு பிரபலமாக இருப்பதில் தனக்கு எந்த வித விருப்பமும் இல்லை என்றும், ஹாலிவுட் சினிமா துறை வாழ உகந்த ஒரு இடமாக இல்லை என்றும் கூறியுள்ளார்.
நான் நடிக்க வந்திருக்க மாட்டேன்
தான் நடிக்க வந்த காலத்தில் ஊடக கவனம் குறைவாக இருந்ததாகவும், இன்றைய சூழலில் தான் ஒரு இளம் நடிகையாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் ஹாலிவுட்டில் நடிக்க வந்திருக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தன் விவாகரத்தைத் தொடர்ந்து அளவுக்கு அதிகமான ஊடக கவனத்தால் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்று கூறிய ஏஞ்சலினா ஜோலி, இதன் காரணத்தினால் விரைவில் ஹாலிவுட் அதாவது லாஸ் எஞ்சலஸை விட்டு வெளியேற இருப்பதாக கூறியுள்ளார்.
தனக்கு பெரியளவிலான நட்பு வட்டங்கள் இங்கு இல்லையென்றும் தன்னுடைய வளர்ப்பு மகனின் பூர்வீகமான கம்போடியாவிற்கு முடிந்த அளவிற்கு சீக்கிரமாக குடிபெயர இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிகப்படியான மன உளைச்சல், ரத்தக் கொதிப்பு தனக்கு ஏற்படுவதாகவும், தான் ஆஸ்கர் வென்ற போது தனக்கு கிடைத்த புகழின் உச்ச நிலை தன்னை தற்கொலை செய்துகொள்ள தூண்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.