உலகம் முழுவதும் இன்று பெரியார் தேவைப்படுகிறார் - ஆக்ஸ்போர்டில் முதலமைச்சர் பேச்சு
புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகம் முழுவதும் பெரியார் தேவைப்படுகிறார் என்று பேசினார்.

வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது இங்கிலாந்தில் உள்ளார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பெரியாரின் படத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
பெரியாரின் பேரன்:
பல நூறு ஆண்டுகளாக உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன். இங்கே நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர், தெற்காசிய நாட்டின் அரசியலைப் புரட்டிப்போட்ட இயக்கமான திமுக தலைவர் என்ற தகுதியுடன் மட்டுமல்ல பெரியாரின் பேரன் என்ற கம்பீரத்துடன் உங்கள் முன்னால் நான் நிற்கிறேன்.
உலகம் முழுவதும் தேவைப்படுகிறார் பெரியார்:
பகுத்தறிவு பகலவன், அறிவாசான் தந்தை பெரியாரின் படத்தை ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக்கழகத்தில் திறந்து வைத்ததை என் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். பகுத்தறிவு பட்டாெளி உலகம் முழுவதும் பரவி வருகிறது என்பதன் அடையாளம்தான் இந்த படத்திறப்பு விழா. பெரியார் இன்று உலகம் முழுவதும் தேவைப்படுகிறார் என்பதன் அடையாளமாக அவருடைய படத்தை திறக்க திட்டமிட்டிருக்கிறீர்கள்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவுடைய அடையாளம் மட்டுமில்லாமல் உரிமையின் அடையாளம். மனித உரிமையின் அடையாளம். உலக அடையாளம். பெரியாரின் படம் இங்கு திறக்கப்படுகிறது என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
பெருமை:
பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தை உலகயமாக்கும் நோக்கத்துடன் இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள பேராசிரியர்களுக்கு என் நன்றி. சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாக இருக்கும் திமுக தலைவர் பொறுப்பில் இருக்கும் எனக்கு இதைவிட பெருமை எதுவும் இருக்க முடியாது.
பெரியாரின் கொள்கை வாரிசு என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். பலமுறை பெரியாரை பார்த்திருக்கிறேன். எங்கள் வீட்டில் நடந்த திருமணத்திற்கு வந்திருக்கிறார். நான் அவருக்கு உணவு பரிமாறி இருக்கிறேன். இதை சொல்லும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு பெருமை:
ஒரு இனத்துக்கு சுயமரியாதை உணர்வை ஊட்டி தலைநிமிர வைத்த பெரியாரை இன்றைக்கு உலகம் கொண்டாடி வருவதுதான் தமிழ்நாட்டிற்கும், திராவிட இயக்கத்திற்கும் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பெருமை.
இங்கிலாந்தின் செயிண்ட் அந்தோணி கல்லூரியும், பெல்லியோல் கல்லூரியும் இணைந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் மாநாட்டை ஒருங்கிணைக்கிறார்கள் என்று என்னிடம் சொன்னபோது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது.
1983ல் செப்டம்பர் 21ம் நாள் இதே ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் வீரமணி பங்கேற்று பெரியார் நூற்றாண்டு விழா நடந்தது. அது நடந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதற்கு பிறகு இன்று மீண்டும் ஆக்ஸ்போர்டில் பெரியாரின் பகுத்தறிவு ஒளி பரவுகிறது.
சுயமரியாதை
பெரியாருக்கு மிக மிக பிடித்த சொல் என்றால் அது சுயமரியாதை. உலகத்தில் எந்த அகராதியை காட்டினாலும் இதைவிட சிறந்த சொல்லைக் காட்ட முடியாது என்று சொன்னார் பெரியார். ஒரு மனிதனுக்கு சுயமரியாதை எண்ணத்தை ஊட்டிவிட்டால் அவன் வெற்றி பெற்றிடுவான் என்றார். உலகத்திலே உயிரைக் கொடுத்து பெற வேண்டிய ஒன்று சுயமரியாதைதான் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார் பெரியார்.
மனிதனின் சுயமரியாதையை காக்கத்தான் அனைத்து அரசியல் தத்துவங்களும் தேவை என்று சொல்லி, தான் உருவாக்கிய இயக்கத்துக்கே சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைத்தார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு இந்த மாபெரும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Before You Go
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
ட்ரெண்டிங் செய்திகள்






















