திருவள்ளூரில் நடந்த சோகம்: தந்தையை வெட்டிய மகன், தண்ணீர் வாளியில் விழுந்து குழந்தை மரணம்
திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கிரைம் செய்திகளை பற்றிய விவரங்களை கீழே தெரிந்துக்கொள்ளலாம்.

மொபைலில் வீடியோ எடுத்த இளைஞர்
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காவல் சரகத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். கடந்த 2 - ம் தேதி காலை , வீட்டு குளியல் அறையில் சிறுமி குளித்து கொண்டிருந்ததை தரை தளத்தில் வசிக்கும் கங்காதரன் ( வயது 27 ) என்பவர் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். பெற்றோர் புகாரின் படி விசாரித்த கொரட்டூர் போலீசார் கங்காதரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போதையில் தந்தையை வெட்டிய மகன்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் ( வயது 52 ) விறகு வெட்டும் தொழில் செய்து வந்தார். இவரது மகன் ஜஸ்டீன் ( வயது 27 ) கட்டட மேஸ்திரி. சில மாதங்களாக ஜஸ்டீன் சரியாக வேலைக்கு செல்லாதது , மது அருந்துவது உள்ளிட்ட காரணங்களால் தந்தை அருள்தாஸ் உடன் தகராறு இருந்து வந்துள்ளது. ஜஸ்டின் மது போதையில் இருந்த போதெல்லாம் தந்தையை தாக்குவது தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் ஜஸ்டீன் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். அதை தந்தை தட்டி கேட்டுள்ளார். அப்போது நடந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஜஸ்டீன், வீட்டில் கிடந்த அரிவாளால் தந்தை அருள்தாஸின் தலையில் வெட்டினார். இதில் அவர் இறந்துள்ளார். தகவலறிந்த கனகம்மாசத்திரம் போலீசார் , சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஜஸ்டீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மது பாட்டிலை உடைத்து தன்னை தானே கழுத்தில் குத்தி இளைஞர் இறப்பு
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோவில்பதாகையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் ( வயது 22 ) இவர் பெயின்டராக வேலை செய்து வருகிறார். இவர் ஹரிணி ( வயது 22 ) என்பவரை ஜூன் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது ஹரிணி கர்ப்பமாக உள்ளார். இருவருக்கும் இடைய வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் , ஹரிணியை பயமுறுத்த வெளியில் கிடந்த மது பாட்டிலை உடைத்து தன் கழுத்தில் குத்திக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் விழுந்த ஸ்ரீதர் , ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது வரும் வழியில் அவர் இறந்தது தெரிந்தது.
8 மாத பெண் குழந்தை தண்ணீர் வாளியில் தலைகுப்புற விழுந்து பலி
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த ராஜிவ் காந்தி நகர் , ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணா ( வயது 30 ) பொக்லைன் ஓட்டுநர். அவரது மனைவி காந்தா மேரி ( வயது 25 ) மாலை இவர்களின் 3 வயது பெண் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வர காந்தா மேரி சென்றார். அப்போது எட்டு மாத பெண் குழந்தையை , வீட்டில் இருந்த தாய் சொர்ணாவிடம் பார்த்துக் கொள்ளும் படி கூறி சென்றார். சொர்ணா உடல் அசதியில் தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது வெளியே சென்ற குழந்தை , வராண்டாவில் தண்ணீருடன் வைத்திருந்த பிளாஸ்டிக் வாளியில் , தலை குப்புற தவறி விழுந்துள்ளது. வீடு திரும்பிய காந்தர மேரி, இதை கண்டு குழந்தையை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.




















