Maamannan: ‘கெட்டவர்கள் சாதியைப் பயன்படுத்திக்கொள்வார்கள்' .. ரத்னவேல் கொண்டாடப்படுவதை விமர்சித்த சீமான்..!
மாமன்னன் படத்தில் இடம் பெற்ற நடிகர் ஃபஹத் பாசிலின் கேரக்டரை சாதிய ரீதியாக கொண்டாடுவதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
மாமன்னன் படத்தில் இடம் பெற்ற நடிகர் ஃபஹத் பாசிலின் கேரக்டரை சாதிய ரீதியாக கொண்டாடுவதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படம் கடந்த ஜூன் 29 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால், சுனில் என பலரும் நடித்திருந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேற்கு மாவட்ட அரசியலை மையமாக கொண்ட இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
இப்படம் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் திரையுலக வாழ்வில் கடைசிப்படம் என சொல்லப்பட்டதால் பலரும் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தனர். அதேசமயம் மாமன்னன் படம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதை என்ற பேச்சும் ஒரு பக்கம் உலாவியது. இதனால் அரசியல் களத்திலும் இப்படம் கடும் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் தான் மாமன்னன் படம் ஜூலை 27 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
அவ்வளவு தான். தியேட்டரில் படம் பார்க்காத பலரும் ஓடிடி தளத்தில் மாமன்னன் படம் பார்வையிட்டனர். அதேசமயம் என்ன நோக்கத்திற்காக அப்படம் எடுக்கப்பட்டதோ, அதனை சிதைக்கும் வண்ணம் கதையை மாற்றி எழுதி விட்டனர். அதாவது, மாமன்னன் படத்தில் ரத்னவேல் என்ற கேரக்டரில் ஆதிக்க சாதியை சேர்ந்தவராக நடிகர் ஃபஹத் பாசில் நடித்திருப்பார். எதிர்மறையான குணங்களை கொண்ட அந்த கேரக்டரை, சாதிய பின்னணியில் பலரும் கொண்டாட தொடங்கினர்.
உச்சக்கட்டமாக நடிகர் ஃபஹத் பாசிலின் காட்சிகளை மட்டும் தனியாக எடிட் செய்து சினிமாவில் இடம் பெற்ற சாதிய பின்னணியிலான பாடல்களை ஒலிக்கவிட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்தனர். இதனால் மாமன்னன் படத்தை ஓடிடியில் அதிக பார்வையாளர்கள் பார்வையிட்டனர். இணையவாசிகள் இந்த செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அந்த வகையில், “சாதியவாதிகளுக்கு மகிழ்ச்சி என்பது தற்காலிகம்தான். ஏனெனில், சாதியவாதியான ரத்னவேலுக்கு ஏற்படும் சோக முடிவை யாரும் மறந்திருக்க முடியாது.சாதியவாதிகளுக்கு நாளை இந்த முடிவுதான் ஏற்படும் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜ் எச்சரித்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு விமர்சித்திருந்து இருந்தார்.
இப்படியான நிலையில் மாமன்னன் படம் குறித்தும், ரத்னவேல் கேரக்டரை ஒவ்வொரு சாதியினரும் சொந்தம் கொண்டாடுவது குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ இதுக்கு ஒரே கருத்துதான் இருக்கு. இதை பசும்பொன் முத்துராமலிங்க தேவர்தான் சொல்லியிருக்கிறார். அதாவது நல்லவனை சாதி பயன்படுத்தி கொள்ளும். கெட்டவன் சாதியை பயன்படுத்தி கொள்வான்” என சீமான் தெரிவித்துள்ளார்.