Neeya Naana This Week: அண்ணன் தங்கைகளின் பண சிக்கலும் உணர்வுப் போராட்டமும்.. நீயா நானாவில் இந்த வாரம்!
Neeya Naana this week: இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் தலைப்பு "வசதியான சூழலில் இருக்கும் தங்கை vs பொருளாதார போராட்டத்தில் இருக்கும் அண்ணன்".
விஜய் டிவியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி நீயா நானா. இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பவர்கள், திரும்ப திரும்ப ஹாட்ஸ்டாரில் பார்ப்பவர்கள் என பல வகையான தீவிர ரசிகர்கள் உள்ளனர். பல ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் மவுசு, கொஞ்சமும் தொய்வு அடையாமல் மேலும் மேலும் மெருகேறிக்கொண்டே இருப்பதற்கு முக்கியமான காரணம் எமோஷனல் கனெக்ட், பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பகிரப்படும் கருத்துகள் முன் வைக்கப்படும் விவாதங்கள் தான்.
ஒரு சில வாரங்கள் மிகவும் சுவாரஸ்யமான தலைப்புகள் இருக்கும், பல நேரங்களில் உணர்வுப்பூர்வமான தலைப்புகள், சமுதாய பிரச்சினைகள், குடும்பம் சார்ந்த சிக்கல்கள், உடல் சார்ந்த விஷயங்கள், உணவு பழக்கவழக்கங்கள், பாரம்பரியம் இப்படி அடுக்கி கொண்டே போகலாம். அந்த வகையில் இந்த வாரம் நீயா நானா எபிசோட் முழுவதும் உணர்ச்சி நிரம்பி வழிய போகிறது என்பதை வெளியான ப்ரோமோ மூலம் அறியப்படுகிறது. ஆம் இந்த வாரத்திற்கான தலைப்பு 'வசதியான சூழலில் இருக்கும் தங்கை vs பொருளாதார போராட்டத்தில் இருக்கும் அண்ணன்'. அண்ணன்கள் ஒரு பக்கமும் தங்கைகள் எதிர் பக்கமும் இருந்து அவர்களுக்குள் இருக்கும் உறவை அலசி ஆராய்ந்து அவர்களுக்குள் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சி பொங்கும் எபிசோடாக இருக்க போகிறது.
தங்கைகளுக்காக அண்ணன்கள் செய்யும் தியாகங்கள், அண்ணன்களின் நிம்மதிக்காக உருகும் தங்கைகள் என விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோ பார்வையாளர்களின் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது. அண்ணன் தங்கைக்குள் எவ்வளவு தான் சண்டை சச்சரவு பிரச்சினை இருந்தாலும் ஆழ்மனதில் அவர்களுக்குள் இருக்கும் அந்த உறவு பாசம் அவற்றை யாராலும் வெட்டி எறிய முடியாது.
இந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் தான் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த சமயத்தில் அண்ணன் தனக்கு ஆதரவாக அவருடன் இருந்ததற்காக, அண்ணனை விட்டு அண்ணி பிரிந்து சென்று விட்டார் என மனம் கலங்கி பேச, மற்றுமொரு தங்கை தன்னுடைய அண்ணனுக்கு நிம்மதியான தூக்கம் என்பது ஒரு நாளும் இருந்ததே கிடையாது என கண்ணீருடன் பேசியது சபையில் இருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
வழக்கமாக தன்னுடைய கருத்தை மிகவும் அழுத்தமாக பதிவு செய்யும் கோபி இந்த முறை வாயடைத்து அமைதியாக இருக்கிறார். இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியை காண சின்னத்திரை ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.