Nawazuddin Siddiqui : திருநங்கை வேடத்தில் மாஸாக களமிறங்கும் ரஜினி பட வில்லன்.. குதூகலமான ரசிகர்கள்..
பிரபல ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் ’ஹட்டி’ என்னும் திரைப்படத்தில் திருநங்கையாக நடிக்க உள்ளார்.
ஹிந்தி திரையுலக நடிகர்களுள் பிரபலமானவராக விளங்குபவர், நவாசுதீன் சித்திக். இவர் 1999-ஆம் ஆண்டு பாலிவுட் திரையுலகிற்குள் நுழைந்தவர். நவாசுதீன் தனது முதல் படத்திலேயே பிரபல நடிகர் அமீர்கானுடன் சேர்ந்து நடித்தார். பின்பு அவ்வப்போது சில விளம்பர படங்களில் நடிப்பதுடன், துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர், 2012-ஆம் ஆண்டு கஹானி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். தனது நடிப்பிற்காக இவர் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ”பேட்ட”. இந்த படத்தில் சிங்கார் சிங் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நவாசுதீன். பிற வில்லன்களை போல துப்பாக்கி மற்றும் கத்தியை தூக்கிக்கொண்டு அலைந்தாலும் வில்லத்தனத்தில் மாஸ் காட்டியிருப்பார். இவரது நடிப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
நவாசுதீன் சித்திக் தற்போது பாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு சேக்ரட் கேம்ஸ் என்ற பெயரில் த்ரில்லர் தொடர் ஒன்று வெளியானது. இந்த தொடருக்கு பிறகு இவருக்கு சீரீஸில் நடிக்க பல்வேறு வாய்ப்புகள் குவிந்தன. இதையடுத்து அவர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ஹட்டி (HaddI) என பெயரிடப்பட்டுள்ளது. இதில், அனுராக் கஷ்யப், விபின் ஷர்மா, அருண் உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கிராமத்தில் ஹரி எனும் பெயரில் வளரும் ஒருவன், பெண்ணாக மாறி புதிதாக ஒரு வரலாற்றை ஏற்படுத்துவதுபோல இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் தைரியமான திருநங்கை கதாபாத்திரத்தில் நவாசுதீன் சித்திக் நடித்துள்ளார். இந்த படத்திற்காக திருநங்கைகளின் தினசரி வாழ்க்கை முறை, அவர்கள் எங்கு வாழ்கின்றார்கள்? அவர்கள் எங்கு சிகிச்சை பெறுகிறார்கள்? உள்ளிட்ட தகவல்களை திரட்டி அவர்களின் உண்மையான வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க,
Crime: லிவ் இன் பார்ட்னரின் 11 வயது மகனை கொடூரமாக கொலை செய்த பெண்.. டெல்லியில் பயங்கரம்..!