Naseeruddin Shah: “பணம் பின்னால் ஓடுகிறார்கள்.. தரமான இந்தி படம் வருவதில்லை” - நடிகர் நசுருதீன் ஷா அதிரடி
நான் இப்போதெல்லாம் இந்தி படங்கள் பார்ப்பதில்லை என பிரபல பாலிவுட் நடிகர் நசுரூதின் ஷா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் இப்போதெல்லாம் இந்தி படங்கள் பார்ப்பதில்லை என பிரபல பாலிவுட் நடிகர் நசுரூதின் ஷா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 40 வருடங்களாக பாலிவுட்டின் அசைக்க முடியாத நபராக வலம் வருகிறார். எந்த மாதிரியான கேரக்டரை கொடுத்தாலும் சிறப்பான செய்து முடிப்பவர் நசுருதீன் ஷா. 1975 ஆம் ஆண்டு நிஷாந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் தேசிய விருது பெற்ற நிலையில் அன்று முதல் இன்று வரை அவரது பெயர் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நடிப்பின் பல்கலைக்கழகம் என்றழைக்கப்படுபவர் பிரபல பாலிவுட் நடிகர் நசுருதீன் ஷா துணிச்சலான கேரக்டரில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பிற படங்கள் பற்றி வெளிப்படையாக விமர்சனம் செய்து பரபரப்பை ஏற்படுத்துவார்.
கடந்தாண்டு நசுரூதின் ஷா குட் டே மற்றும் தாஜ் பிளட் பை பிளட் ஆகிய வெப் சீரிஸ்களில் நடித்தார். இதனைத் தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் 'ஷோடைம்' என்ற வலைத் தொடரில் வந்தார். இம்ரான் ஹாஷ்மி, ஷ்ரியா சரண், மௌனி ராய், ராஜீவ் கண்டேல்வால் ஆகியோர் நடித்த இந்த தொடரில் நசிருதீன் ஷாவும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இப்படியான நிலையில் இம்முறை அவர் ஒட்டுமொத்த இந்தி திரையுலகத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பேட்டி ஒன்றில், ‘தற்போதைய நிலையில் இந்தி படங்களின் நிலைமை என்பது மிகவும் மோசமாக உள்ளது. இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பணத்தின் பின்னால் ஓடுகிறார்கள். இதனால் சிறந்த படைப்புகள் உருவாகவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் உருவான படங்களும், ஏற்கனவே அதற்கு முன்னதாக நாம் பார்த்த படங்களும் ஒரே மாதிரியாகவே உள்ளது.
கடந்த 100 வருடங்களாக ஒரே மாதிரியான படத்தைத் தயாரித்து அதை ரசிகர்களுக்கு காட்டிக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இதே படங்களை மக்களுக்கு காட்டப் போகிறோம்?. நான் எப்போதோ இந்திப் படங்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். எனக்குப் பிடிக்கவே இல்லை. மக்கள் விரும்பி பார்க்கும் திரைப்படங்கள் தொடர்ந்து உருவாகினால் அதற்கு தொடர்ந்து ஆதரவு இருக்கும். எனவே வித்தியாசமான மற்றும் அர்த்தமுள்ள திரைப்படங்களை எடுக்க விரும்புவோருக்கு மிகப்பெரிய பொறுப்பு என்பது காத்திருக்கிறது. பணம் சம்பாதிக்கும் நோக்கமின்றி திரைப்படங்களை எடுத்தால் மட்டுமே அது சிறப்பாக அமையும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: BAFTA Awards 2024: ஃபப்டா திரைப்பட விழா.. 7 பிரிவுகளில் விருதுகளை அள்ளிய ஓப்பன்ஹைமர்!