HBD Karthik Raja: இளையராஜாவின் அசல் நகல்! இசைஞானியின் மூத்த பிள்ளை கார்த்திக் ராஜாவிற்கு பிறந்தநாள்!
HBD Karthik Raja: இளையராஜாவின் மூத்த மகனும் இசை வாரிசுமான இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பிறந்தநாள் இன்று.
திரை இசை உலகில் மாபெரும் ஜாம்பவானாக இசை மேதையாக வலம் வரும் இசைஞானி இளையராஜா இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் டஃப் கொடுக்கும் வித்தகராக மேலோங்கி நிற்கிறார். அவரின் இளைய வாரிசான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் தனக்கென ஒரு தனி ட்ரெண்ட் செட் செய்து பிரபலமான ஒரு கலைஞராக பிஸி மேனாக வலம் வருகிறார். அந்த வகையில் தந்தைக்கும் தம்பிக்கும் இருக்கும் திறமைகள் அனைத்தையும் உள்ளடக்கி பல வெற்றி பாடல்களை கொடுத்து இருந்தாலும் பெரிய அளவில் இந்த திரை இசை உலகில் சோபிக்க முடியாமல் போனது. இருப்பினும் அமைதியின் உருவமாக விளங்கும் கார்த்திக் ராஜா பிறந்தநாள் இன்று.
கார்த்திக் ராஜாவின் முதல் பாடல்:
இளையராஜாவின் தெவிட்டாத இன்னிசை பாடல்கள் இன்றும் கொண்டாடப்படுகின்றன. அதே போன்ற ஒரு தெளிந்த நீரோடை போல அலட்டல் இல்லாத பல வெற்றி பாடல்களை கொடுத்தவர் கார்த்திக் ராஜா. ஆனால் அவரின் திறமைகள் ஏனோ அங்கீகரிக்கப்படாமல் இருப்பது சற்று வேதனை அளிக்கிறது.
தன்னுடைய பருவ வயதிலேயே தந்தையுடன் இணைந்து பல பாடல்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். அன்று முதல் இன்று வரை தந்தையின் வலது கையாக பக்கபலமாக இருந்து வருகிறார். மேற்கத்திய இசையையும், கர்நாடக இசையையும் முறையாக பயின்றவர். ரஜினிகாந்தின் பாண்டியன் படத்தில் இடம்பெற்ற 'பாண்டியனின் ராஜ்யத்தில் உய்யலாலா' இது தான் கார்த்திக் ராஜா இசையமைத்த முதல் பாடல். அதை தொடர்ந்து இளையராஜா இசையமைத்த பல படங்களுக்கும் பின்னணி இசை அமைத்தது கார்த்திக் ராஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் மாணிக்கம், அலெக்சாண்டர் உள்ளிட்ட படங்களுக்கு கார்த்திக் ராஜா தான் இசையமைத்து இருந்தார் என்றாலும் அவரின் ஒட்டுமொத்த திறமையையும் வெளிப்படுத்திய படம் அஜித் - விக்ரம் இணைந்து நடித்த 'உல்லாசம்' திரைப்படம். இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே இன்று வரை எவர்கிரீன் பாடல்களாக இனிமை சேர்த்து வருகின்றன.
நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா, டும் டும் டும், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட். இது தவிர குடைக்குள் மழை, ஆல்பம், நாளை உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.
அப்பா, தம்பி படங்களுக்கு பின்னணி இசையில் கெட்டிக்காரர்:
பின்னணி இசையில் ராஜாவான இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜாவும் பின்னணி இசை அமைப்பதில் படு கெட்டிக்காரர். அப்பாவுக்கு மட்டுமின்றி தம்பி இசையமைத்த பல படங்களுக்கும் கார்த்திக் ராஜா தான் பின்னணி இசை அமைத்துள்ளார். அரண்மனை, புதிய கீதை உள்ளிட்ட படங்கள் அதற்கு உதாரணம். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ட்ரெண்டிங்கில் இருந்தாலும் இளையராஜாவின் நகல் போல இசையமைக்க கூடியவர் கார்த்திக் ராஜா. அவரின் முழு திறமையும் அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு ஒரு வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.