Mohan about Balachander: நடிகர் மோகனை திட்டித் தீர்த்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் - என்ன நடந்தது தெரியுமா?
Mohan about Balachander : நடிகர் மோகன் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கதையை பற்றி வெளிப்படையாக பேசி இருந்தார்.
80ஸ் காலகட்டத்தில் லவர் பாயாக வலம் வந்தவர் நடிகர் மோகன். அவரின் இளமையான தோற்றம், துறு துறு பார்வை, அசத்தும் சிரிப்பால் ரசிகர்களை காந்தம் போல ஈர்த்தார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணலில் பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
பாலச்சந்தர் அறிமுகப்படுத்த வேண்டிய மோகன்:
1977ம் ஆண்டு பாலுமகேந்திராவின் 'கோகிலா' என்ற கன்னட திரைப்படம் மூலம் அறிமுகமானாலும் அவரை முதலில் ஒரு அறிமுகப்படுத்த இருந்தது இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர். தெலுங்கில் 1978ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான 'மரோசரித்ரா' படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னை தேர்வு செய்து இருந்தார்.
அப்படத்திற்கு 'அலைகள் எழுதிய கவிதை' என அந்த படத்துக்கு தலைப்பிட்டு இருந்தார் கே. பாலச்சந்தர். பத்மினி கோலாபுரெ என்ற இந்தி நடிகை தான் படத்தில் சரிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஹீரோயினாக தேர்வு செய்து இருந்தார். ராமா அரங்கன்னல் தயாரிப்பில் உருவாக இருந்த அப்படத்திற்கு அட்வான்ஸ் பணமாக 2500 ரூபாயை கூட பெற்றுக்கொண்டேன்.
மொட்டை அடித்த மோகன்:
ஆனால் அதே நேரத்தில் தெலுங்கில் மிகப்பெரிய இயக்குநரான பாபு சார் 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் தெலுங்கு ரீமேக் படமான 'தூர்பு வெள்ளே ரைலு' படத்தில் சுதாகர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னை அழைத்தார். அந்த படத்திற்கு எஸ்.பி.பி சார் முதல் முறையாக இசையமைத்தார். அந்த படத்தில் கழுதை மேலே மொட்டை அடிச்சு உட்காந்து போவது போல ஒரு காட்சி இருக்கும். அதுக்காக நான் மொட்டை அடித்து இருந்தேன்.
திட்டித் தீர்த்த பாலச்சந்தர்:
பாலச்சந்தர் சார் என்னை 'மரோசரித்ரா' படத்திற்காக கூப்பிடும் போது மொட்டை தலையாக போனேன். ஷூட்டிங் போகலாம் என எல்லோரையும் அழைத்தார். மோகன் எங்கே எங்கே என்னை தேடும் போது நான் ஓரமாக நின்று கொண்டு இருந்தேன். என்னை மொட்டை தலையுடன் பார்த்ததும் பயங்கரமாக திட்டி தீர்த்தார். இத்தனை நாட்களாக ஹீரோவுக்காக காத்திருந்தா நீ இப்படி வந்து நிக்குற என வாய்க்கு வந்தபடி தீர்த்தார்.
பிறகு நான் அவரிடம் பாபு சார் அழைத்தது பற்றி விளக்கம் கொடுத்தேன். படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார். அதற்குள் தெலுங்கு வெர்ஷன் தமிழ்நாட்டில் வெளியாகி பயங்கரமான ஹிட் அடித்தது. கடைசியில் பாலச்சந்தர் இயக்கத்தில் என்னால் ஒரு படத்தில் கூட நடிக்க முடியாமல் போனது.
பாலுமகேந்திரா, மணிரத்னம் , மகேந்திரன் என பல ஜாம்பவான் இயக்குநர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்த மோகன் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளது தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் அவர் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.