கருவுற்றபோதே கணவர் மரணம்.. ஃபோட்டோவுடன் வளைகாப்பு.. மேக்னாவை நினைவிருக்கிறதா?
நடிகை மேக்னா ராஜ் மற்றும் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மகனுக்கு நடந்த பெயர்சூட்டு விழாவில் 'ராயன் ராஜ் சார்ஜா' என்று பெயர் சூட்டியுள்ளனர்.
பிரபல கன்னட நடிகர் சுந்தர் ராஜ், 'வைதேகி காத்திருந்தாள்' படத்தில் அறிமுகமான நடிகை பிரமிளா ஜோஷி தம்பதியினரின் ஒரே மகள் மேக்னா ராஜ். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் மேக்னா ராஜ்.
கடந்த 2018-ம் ஆண்டு மேக்னா ராஜ், நடிகர் அர்ஜுனின் உறவினரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னா ராஜும் இணைந்து நடித்த சில படங்கள் வெற்றிகரமாக ஓடின. மேக்னா ராஜ் கர்ப்பமான நிலையில், கடந்த ஜூன் மாதம் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். அவர் மறைந்தபோது, மேக்னா ராஜ், 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இளம் நடிகரின் இந்த திடீர் மரணம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனால் மனமுடைந்து இருந்த மகளுக்கு தந்தை சுந்தர்ராஜ் கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட்டவுட்டுடன் வளைகாப்பு நடத்தியது பலரையும் உருக வைத்தது.
அவர் மறைவை அடுத்து மேக்னா ராஜ் வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், ‘நம் காதலின் அடையாளமாக விலைமதிக்க முடியாத பரிசை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். அது நம் குழந்தை’ என்று கூறியிருந்தார். இவருக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை செல்லமாக சிண்ட்டு என அழைத்து வந்தனர்.
இந்நிலையில் குழந்தைக்கு குடும்பத்தினர் முன்னிலையில் பெயர் சூட்டுவிழா நடைபெற்றது. இந்நிலையில் தன் குழந்தைக்கு ராயன் ராஜ் சார்ஜா (Raayan Raj Sarja) என பெயர் சூட்டியுள்ளதாக நடிகை மேக்னா ராஜ் இரு நாட்களுக்கு முன்னரே அறிவித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் ஸ்பெஷல் வீடியோவாக விழா நிகழ்வுகளை வெளியிட்டுள்ள மேக்னா ராஜ், உருக்கமான பதிவு ஒன்றையும் எழுதியுள்ளார். அந்த பதிவில், "ஒரு தாயாக நான் என் மகனுக்கு வேண்டியதை செய்வது அவசியம்... என் கணவருடய ஜாதி மதத்தைப் பொருட்படுத்தாமல் மக்கள் அவருக்காக பிரார்த்தனை செய்தார்கள்... நாங்களும் எங்கள் குடும்பங்களுக்காக மேலே உள்ள எல்லா கடவுள்களிடமும் ஆசீர்வாதம் கேட்டு நின்றிருக்கிறோம்... ராயன் (சமஸ்கிருதம்), இந்த பெயர் அனைத்து மதங்களுக்கும் சொந்தமானது. வெவ்வேறு உணர்வுகள், வெவ்வேறு உச்சரிப்புகள், ஆனால் திடமான பொருள் கொண்டது! எங்கள் இளவரசன் ... எங்கள் ராயன் ராஜ் சர்ஜா! என் குழந்தை, நீ உன் தந்தையைப் போல் வளருவாய், அவர் மக்களை நேசித்தார், அவர்கள் எந்த பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்பது அல்ல. அவர் கொடுப்பவர்... அவர் ஏற்கனவே உன்னை பற்றி பெருமைகொள்கிறார்! அம்மாவும் அப்பாவும் உன்னை நேசிக்கிறோம்! ஆட்சி செய்ய வேண்டிய நேரம் இது! " என்று பதிவிட்டிருந்தார். அந்த நிகழ்வில் கணவர் சிரஞ்சீவியை குறித்து பேசியபோது, மேக்னா அழுதது அனைவரையும் உருக வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.