Meena About Rajini: எஜமான் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் என்கிட்ட பேசவே இல்ல - நினைவுகளில் மூழ்கிய மீனா..!
'எஜமான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெற்ற சமயத்தில் எனக்கு அங்கு மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்த ரஜனி சார் நீங்க இங்க பெரிய ஸ்டார் போல அப்படினு சொல்லி கிண்டல் செய்தார் - மீனா
அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவின் மிகவும் க்யூட்டான நடிகை என்ற பெயருக்கு சொந்தக்காரர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மிகவும் பிரபலமான நடிகையாக இன்று வரை பயணித்து கொண்டு இருப்பவர். 1982ம் ஆண்டு வெளியான 'நெஞ்சங்கள்' திரைப்படத்தில் அறிமுகமானவரின் 40 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக மீனா 40 நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
14 வயதில் ரஜினியின் ஜோடியாக:
நடிகை சுஹாசினியுடனான ஒரு பேட்டியில் மீனா தனது திரைப்பயணத்தின் பல ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருந்தார். அவரின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கியமான வெற்றி படமாக அமைந்தது 1993ம் ஆண்டு வெளியான 'எஜமான்' திரைப்படம். 'அன்புள்ள ரஜினிகாந்த்' திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எஜமான் படத்தில் ஜோடியானார். அந்த சமயத்தில் மீனாவிற்கு 14 வயது தான் இருக்கும். ஆனால் நடிப்பில் அப்படி ஒரு முதிர்ச்சியை காட்டியிருந்தார் மீனா.
எஜமான் ஷூட்டிங் ஸ்பாட் :
'எஜமான்' படத்தில் நடித்த அனுபவம் குறித்து மீனா பேசுகையில் " முதல் நாள் ஷூட்டிங் சமயத்தில் நானும் ரஜினி சாரும் பேசிக் கொள்ளவே இல்லை. ரஜினி சார் என்னோட அம்மாவிடம் வந்து எனக்கு என்னோவோ மாதிரி இருக்குங்க அப்படினு சொல்லிகிட்டே இருந்தாராம். அந்த படத்தில் எனக்கு மிகவும் வெயிட்டான ரோல். அதை என்னால் சரியாக புரிந்து கொள்ள கூட முடியவில்லை. ஆனால் படத்தின் இயக்குனர் உதயகுமார் சார், மனோரமா ஆச்சி, விஜயகுமார் அங்கிள் என அனைவரும் எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க. ரஜினி சார் இதை பண்ணு அதை பண்ணு அப்படினு எல்லாம் எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் நான் இந்த டயலாக் சொன்ன பிறகு இதை சொல்லுங்க, அப்படி நடிங்க இது போல சின்ன சின்ன விஷயங்கள் மட்டும் சொல்வார்.
இங்க நீங்க பெரிய ஸ்டார் போல:
'எஜமான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெற்றது. அந்த சமயத்தில் நான் ஏற்கனவே சில தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்ததால் அங்கு மக்கள் மத்தியில் நான் மிக பிரபலம். ஷூட்டிங் சென்ற போது அங்கு மக்கள் அனைவரும் என்னை வரவேற்பதை பார்த்த ரஜினி சார் நீங்க இங்க பெரிய ஸ்டார் போல அப்படினு சொல்லி கிண்டல் செய்தார். இப்படி பல ஸ்வாரஸ்யமான நிகழ்வுகள் எஜமான் படப்பிடிப்பில் நடந்தது.
ரொம்ப கஷ்டமா இருக்கு பா:
மீனா எஜமான் திரைப்படம் பற்றி சொன்னதும் நடிகை சுஹாசினியும் அது குறித்து ஒரு இன்டெரெஸ்ட்டிங் தகவல் ஒன்றை பகிர்ந்தார். "தளபதி ஆடியோ லான்ச் சமயத்தில் ரஜினி பேசுகையில் இளையராஜா சார் ரொம்ப லக்கி, ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு ஹாய்யாக மியூசிக் போடுறாரு ஆனா நாங்க தான் வெயிலில் கஷ்டப்பட்டு ஃபைட் பண்ணனும், டைலாக் பேசணும், குட்டி குட்டி பொண்ணுங்களோட எல்லாம் ரொமான்ஸ் பண்ணனும், ரொம்ப கஷ்டமா இருக்குது பா" என்றாராம். உங்களை நினைத்து தான் அப்படி சொல்லி இருப்பார் போல இருக்கு என்றார் சுஹாசினி.