Wakanda Forever: வசூலை வாரி குவிக்கும் வகாண்டா பாரெவர்...! இந்தியாவிலும் வசூல் வேட்டை நடத்தும் ப்ளாக்பேந்தர்..
மார்வெல் திரையுலகின் புதிய படமான பிளாக்பாந்தர் வகாண்டா பாரெவர், வெளியான முதல் வாரத்திலேயே உலக அளவில் ரூ.3,260 கோடியை வசூலித்துள்ளது.
உலக அளவில் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள மார்வெல் நிறுவனம், தனக்கென தனி திரையுலகையே கட்டமைத்துள்ளது. பல்வேறு ஆபத்துகளில் இருந்து சூப்பர் ஹீரோக்களை கொண்டு உலகத்தை காப்பாற்றும் வகையிலான, மார்வெல் திரைப்படங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை வசூலாக குவிப்பதும் இயல்பான ஒன்றாக மாறியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான பிளாக் பாந்தர் வகாண்டா பாரெவர் திரைப்படமும் வசூலில் வாரிக் குவித்து வருகிறது.
வகாண்டா பாரெவர் :
பிளாக்பாந்தர் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாட்விக் போஸ்மேன் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த நிலையில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே வகாண்டா பாரெவரின் திரைக்கதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நேமோர் மற்றும் அயர்ன் ஹார்ட் ஆகிய இரண்டு புதிய சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களும் இப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 11ம் தேதி வெளியான இப்படத்தில், முதல் பாகத்தில் இடம்பெற்ற சூரி, இம்பாகு, ஒகோயி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளன. முதல் படம் அளவிற்கு இரண்டாம் பாகம் இல்லை என கூறப்பட்டாலும், சாட்விக்கின் மரணத்தை தொடர்ந்து இப்படம் வெளியாகி இருப்பது ரசிகர்கள் இடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அமெரிக்கா மட்டுமின்றி இந்திய உள்ளிட்ட பல நாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Marvel Studios' Black Panther: #WakandaForever is the #1 movie in the world. Experience it now only in theaters.
— Black Panther: Wakanda Forever (@theblackpanther) November 15, 2022
Get tickets: https://t.co/ACmjU47GTU pic.twitter.com/voQyfHbTMZ
இந்நிலையில், படம் வெளியான ஒரே வாரத்தில் வகாண்டா பாரெவர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.3,260 கோடியை வசூலாக குவித்துள்ளது. இதன் போட்டி நிறுவனமான டிசியின் பிளாக் ஆடம் திரைப்படம் வெளியாகி ஒருமாதம் ஆகியும், அதன் மொத்த வசூல் ரூ.2,850 கோடியை மட்டுமே எட்டியுள்ளது. ஆனால், அந்த வசூலை ஒரே வாரத்தில் வகாண்டா பாரெவர் திரைப்படம் கடந்துள்ளது. அமெரிக்காவில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில், மார்வெலின் மற்றொரு திரைப்படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தின் 2ம் பாகம், ரூ.1,524 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த பட்டியலில் ரூ.1,475 கோடி வசூலுடன் வகாண்டா பாரெவர் திரைப்படம் 2வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவிலும் வசூல் வேட்டை:
முதல்வார முடிவில் உலக அளவில் இப்படம் ரூ.3.260 கோடியை வசூல் செய்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பிளாக் விடோ மற்றும் எடெர்னல்ஸ் ஆகிய மார்வெல் திரைப்படங்களின் வசூலை முறியடித்துள்ள வகாண்டா பாரெவர், இந்த வார முடிவில் சாங்-சி படத்தின் வசூலையும் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் ரூ.2,000 கோடி செலவில் உருவான வகாண்டா பாரெவர் திரைப்படம், கருப்பு இன மக்களை முதன்மை கதாபாத்திராக கொண்டு அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம் எனும் பெருமையையும் பெற்றுள்ளது.பிளாக் பாந்தர் திரைப்படத்தின் முதல் பாகம் 11 ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்த நிலையில், இரண்டாவது பாகம் அந்த வசூலை எட்டுமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.