Deadpool & Wolverine: வாவ் பிரமாதம்! கலக்கலான டெட்பூல் அண்ட் வோல்வரின் ட்ரெயிலர் ரிலீஸ் - குஷியில் மார்வெல் ரசிகர்கள்
மார்வெல் நிறுவனத்தின் டெட்பூல் அண்ட் வோல்வரின் படத்தின் புதிய ட்ரெயிலர் ரிலீசாகியுள்ளது.
ஹாலிவுட்டில் எப்போதும் சூப்பர் ஹீரோக்கள் படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சூப்பர் ஹீரோக்கள் படங்களை தயாரிப்பதில் மார்வெல் மற்றும் டி.சி. நிறுவனங்களுக்கு இணை அவர்கள் மட்டுமே. குறிப்பாக, மார்வெல் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோக்களுக்கு என்று உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கேப்டன் அமெரிக்கா, அயர்ன் மேன், தோர், ஹல்க், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
எக்ஸ் மேன் - டெட்பூல்:
இதில், வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரத்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, எக்ஸ் மேன் எனப்படும் எனப்படும் வோல்வரின் கதாபாத்திரத்திற்கு தமிழ்நாட்டிலே லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எக்ஸ் மேன் வரிசை படங்கள் உலகெங்கிலும் கோடிக்கணக்கில் வசூலை வாரிக்குவித்தவை என்பதும் குறிப்பிடத்தக்து.
இந்த சூழலில், வோல்வரின் கதாபாத்திரம் மற்றும் டெட்பூல் கதாபாத்திரத்தை இணைத்து டெட்பூல் அண்ட் வோல்வரின் படம் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
மிரட்டும் ட்ரெயிலர் ரிலீஸ்:
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு பிறகு ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தை தவிர மற்ற படங்கள் பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி 3-யும் ரசிகர்களை கவர்ந்தது, இந்த சூழலில், உலகெங்கிலும் உள்ள மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டெட்பூல் அண்ட் வோல்வெரின் படம் வரும் ஜூலை 26ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது. லோகன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹியூக் ஜேக்மேனே இதிலும் வோல்வரினாக நடித்துள்ளார். டெட்பூலாக டேட் வில்சன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரியான் ரெனால்ட்சே இதிலும் டெட்பூல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்று வெளியாகியுள்ள ட்ரெயிலரில் தொடக்கத்தில் மாறி, மாறி சண்டையிட்டுக் கொள்ளும் டெட்பூல் மற்றும் வோல்வரின் ஒரு கட்டத்தில் ஒன்றாக இணைந்து சக்திவாய்ந்த வில்லியை எதிர்கொள்கின்றனர்.
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் கேமியோவா?
இதில் ஒரு காட்சியில் இருவரும் இணைந்து ஒரு போர்ட்டல் உள்ளே செல்கின்றனர். வழக்கமாக, மார்வெல் படங்களில் இந்த போர்ட்டல் டாக்டர் ஸ்ட்ரேஞ்சால் மட்டுமே உருவாக்கப்படும். இதனால், இந்த படத்தில் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் வருகிறாரா? என்ற ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு வந்த லோகன் படத்தில் வயதான லோகனாக எக்ஸ்மேன் இறப்பது போல படம் முடிந்திருக்கும். இந்த சூழலில், மீண்டும் திரையில் எக்ஸ் மேனாக வோல்வரினை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். டெட்பூல் கதாபாத்திரம் வழக்கம்போல தன்னுடைய நகைச்சுவை மற்றும் ஆக்ஷனுடன் கலக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஷாவ்ன் லேவி இயக்கியுள்ளார்.
வழக்கமாக மார்வெல் படங்கள் தமிழிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றவை என்பதால், இந்த படமும் தமிழில் வெளியாக உள்ளது.