Ponniyin Selvan 2 : சரித்திர படங்களின் பிள்ளையார் சுழி! பலரின் கனவை நனவாக்கிய பொன்னியின் செல்வன் 2 வெளியான நாள்!
1 year of Ponniyin selvan : நம் தமிழரின் வரலாற்றை இன்றைய தலைமுறையினருக்கு மட்டுமின்றி வரும் தலைமுறையினர்களுக்கும் கடத்தி செல்ல கூடிய ஒரு மாபெரும் படைப்பான பொன்னியின் செல்வன் 2 வெளியான நாள் இன்று.

பல ஆண்டுகளாக பலரின் கனவாக இருந்து ஒரு வழியாக இயக்குநர் மணிரத்னத்தின் வாழ்நாள் சாதனையாக கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. மிக பெரிய திரை பட்டாளத்தையே ஒன்று திரட்டி மாபெரும் வரலாற்று படமாக இரண்டு பாகங்கள் மூலம் அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து காட்சி படைத்தது இருந்தார். முதல் பாகத்தில் கேரக்டர் அறிமுகம் மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. முதல் பாகத்தை காட்டிலும் இரண்டாம் பாகத்தில் அழுத்தமான ஆழமான கதை இருந்ததால் அதன் மீது மக்களுக்கு இருந்து எதிர்பார்ப்பு பல மடங்காக எகிறியது. அந்த படைப்பு வெளியாகி முதலாம் ஆண்டை இன்றுடன் நிறைவு செய்கிறது.
பல கேள்விகளுக்கான விடை :
ஊமை ராணி யார்? சோழர் குலத்தை பழிதீர்க்க வேண்டும் என ஆபத்துதவிகளோடு கூட்டணி சேர்ந்து சூழ்ச்சியில் நந்தினி இறங்க காரணம் என்ன? உண்மையில் நந்தினி யார்? ஆதித்த கரிகாலன் கொலைக்கான காரணம் யார் ? இப்படி பல பல கேள்விகளுக்கு விடையாய் அமைந்த பாகம் தான் பொன்னியின் செல்வன் 2. மிகவும் ஆழமான கதைக்களம், நடிகர்களின் அழுத்தமான நடிப்பு, இயக்குநரின் படைப்பாற்றல் என ஒட்டுமொத்த கூட்டணியின் மெனக்கெடலையும் தாங்கி இருந்தது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்.
உயிரோட்டமான காதல் :
நாவலில் ஒரு கதையாகவே படித்து அறிந்தவர்களுக்கு அந்த கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து உயிரோட்டத்துடன் ரசிகர்கள் மனதில் பதிய செய்த உழைப்பு நிச்சயம் பாராட்டிற்குரியது. ஆதித்த கரிகாலன் மற்றும் நந்தினி இடையே இருந்த அழகான காதல், அவர்கள் இடையில் நடந்த உணர்ச்சி போராட்டம், வந்தியத்தேவன் மற்றும் குந்தவை இடையே மலரும் மெல்லிய காதல் காட்சிகள் அருமையாக சிலிர்க்கும் அனுபவத்தை கொடுத்தன.
நெகிழவைக்கும் காட்சிகள் :
பொன்னியின் செல்வன் நாவலை அப்படியே எதிர்பார்த்தவர்களுக்கு சற்று ஏமாற்றம் மிஞ்சியது என்பது உண்மைதான் என்றாலும் படத்தின் தொடர்ச்சி தொலைந்து விடக்கூடாது என்பதற்காக கல்கியின் கதையில் வேறு சில கற்பனை காட்சிகளும் சேர்க்கப்பட்டு இருந்தன. இருப்பினும் வந்தியத்தேவன் - ஆழ்வார்க்கடியான் இடையே அவ்வப்போது சிறுசிறு நகைச்சுவை உரையாடல், அருண்மொழி கம்பீரம், ஆதித்த கரிகாலன் வீரம், குந்தவை அறிவு, நந்தினியின் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் சில கம்பீரமான காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தின.
வரலாற்று காவியம் :
வீரத்தையும் விரக்தியையும் அசத்தலான நடிப்பால் கண்களிலேயே வெளிப்படுத்திய விக்ரம், பார்த்தவுடன் மயங்கி விடும் அழகும் ஆழ் மனதில் தேக்கி வைத்திருக்கும் வஞ்சகமான வன்மத்தையும் அழகாக வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராய் நடிப்பு காலத்திற்கும் பேசப்படும். ரவிவர்மன் ஒளிப்பதிவு, தோட்டா தரணி கலை இயக்கம், ஏ.ஆர். ரஹ்மான் இசை. மணிரத்தினத்தின் படைப்பாற்றல் என அனைவரின் கரங்களுக்கும் ஒன்றாக இணைந்து ஒரு வரலாற்று காவியத்தை தலைமுறைகளை கடந்து கொண்டாடும் வகையில் அமைத்து கொடுத்துள்ளனர். இது முதலாம் ஆண்டு நிறைவு மட்டுமின்றி தமிழ் திரைப்பயணம் உள்ள வரை இந்த படைப்பு பேசப்படும் என்றால் அது மிகையல்ல.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

