Maamannan:தமிழில் மிகப்பெரிய வெற்றி.. தெலுங்கு ரிலீசுக்கு தயாராகும் மாமன்னன்.. எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்..!
தெலுங்கு மொழியில் ‘நாயகுடு’என்ற பெயரில் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் மாமன்னன் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு
தமிழில் மாபெரும் வெற்றியை பெற்று வருவதால் மாமன்னன் திரைப்படம் வரும் 14ம் தேதி, தெலுங்கு மொழியில் ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் ரிலீசுக்கு முன்னால் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளிவந்த பாடல்களுக்கும் மிகுந்த வரவேற்பை பெற்றன.
தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறை, சாதி அரசியல், ஆதிக்கவர்க்கத்தின் பிடிவாதம் என அனைத்தையும் திரையில் காட்டிய மாரிசெல்வராஜுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. முன்னாள் அதிமுக சபாநாயகர் தனபாலின் கதை தான் மாமன்னன் என்றும் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
அதேநேரம், மாமன்னன் வெளிவந்த ஏழே நாட்களில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் திரைப்படத்தில் கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து மாமன்னன் தெலுங்கில் திரையிட உள்ளது. தெலுங்கு மொழியில் ‘நாயகுடு’என்ற பெயரில் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் மாமன்னன் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சினிமா கேரியரில் மாமன்னன் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாகவே பார்க்கப்படுகிறது. எப்பொழுதும் நகைச்சுவையில் கலக்கி வந்த வடிவேலு இதில் மாமன்னனாக நடித்து படத்தை தூக்கி நிறுத்தி இருப்பார். வடிவேலுவின் சாதுவான, அரசியல் முதிர்ச்சி நிறைந்த நடிப்பு பெரிதாக பேசப்பட்டு வருகிறது. மாமன்னன் வெளியாகி வெற்றிப்பெற்ற நிலையில், இயக்குனர் மாரிசெல்வராஜ் வீட்டிற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், அவருக்கு புதிய காரை பரிசளித்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.