Ram Temple Movies : வெள்ளித்திரை ராமர்கள்... ராமாயண இதிகாசங்களின் தழுவலாக வெளியான திரைப்படங்கள்
Ayodhya Ram Temple Movies : வெள்ளித்திரையில் வெளியான ராமர் திரைப்படங்களும் அதில் ராமராக நடித்த நடிகர்களை பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்
மத்திய பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தென்னிந்திய சினிமாவில் திரைப்படங்களாக வெளியான ஒரு சில ராமரின் இதிகாசங்கள் பற்றி பார்க்கலாம்.
இதிகாச நாயகர்கள் என்றால் முதலில் நினைவு வருபவர் என்.டி. ராமராவ் தான். அவர்களுக்கு உண்டான குணங்களையும், அமைதியான சாந்தமான முக பாவனைகளையும் அத்தனை இயல்பாக வெளிப்படுத்த கூடியவர் என்.டி. ராமராவ்.
சம்பூர்ண ராமாயணம் :
1958ம் ஆண்டு சிவாஜி கணேசன், என்.டி. ராமராவ் ஆகிய இரு பெரும் ஜாம்பவான்களின் நடிப்பில் வெளியான இப்படத்தை இயக்கி இருந்தார் கே. சோமு. இப்படத்தில் என்.டி. ராமராவ் ராமனாக நடித்திருந்தார்.
ஸ்ரீ ராமாஞ்சநேய யுத்தம் :
ராமனுக்கும் அனுமனுக்கும் இடையேயான போர் பற்றின இந்த புராண கதையை பாபு இயக்க இதில் என்.டி. ராமராவ், சரோஜா தேவி, ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் 1975ம் ஆண்டு வெளியானது.
லவ குசா :
ராமாயண இதிகாசத்தில் உத்தரகாண்டத்தின் தழுவலாக 1963ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லவ குசா'. சி. புள்ளையா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் என்.டி. ராமராவ், அஞ்சலி தேவி, சித்தூர் நாகய்யா, காந்த ராவ் , சோபன் பாபு , எஸ். வரலட்சுமி, கைகாலா சத்யநாராயணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சீதா ராம கல்யாணம் :
சீதா மற்றும் ராமர் திருமண வைபவத்தை வைத்து 1986ம் ஆண்டு வெளியான இப்படத்தை என்.டி. ராமராவ் இயக்கியதோடு ராவணனாகவும் நடித்திருந்தார். ஹரநாத், சரோஜா தேவி, கீதாஞ்சலி, கந்தா ராவ், சோபன் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
லவ் குஷ் :
1997ம் ஆண்டு வி. மதுசூதன ராவ் இயக்கத்தில் உத்திர ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு இந்தியில் வெளியான திரைப்படம் 'லவ் குஷ்'. இப்படத்தில் ராமராக ஜீதேந்திராவும் , சீதையாக ஜெயபிரதாவும் நடிக்க லக்ஷ்மணனாக அருண் கோவிலும், அனுமனாக தாரா சிங்கும் , வால்மீகியாக பிராணனும் நடித்திருந்தனர்.
ஸ்ரீ ராம ராஜ்யம் :
பாபு இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான 'ஸ்ரீ ராம ராஜ்ஜியம்' திரைப்படத்தில் ராமராக நந்தமுரி பாலகிருஷ்ணாவும் சீதையாக நயன்தாராவும் நடித்திருந்தனர். மேலும் அக்கினேனி நாகேஸ்வரராவ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஸ்ரீ ராமதாசு :
கே. ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ராமராக சுமன் நடிக்க அக்கினேனி நாகேஸ்வர ராவ், நாகார்ஜூனா, சினேகா, நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஆதிபுருஷ் :
இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன், சன்னி சிங், சைஃப் அலிகான் நடிப்பில் 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆதிபுருஷ்'. ஜானகியை அபகரித்து சென்ற லங்கேஷிடம் இருந்து அயோத்தி இளவரசன் ராகவன் எப்படி வானரப் படைகளுடன் சென்று ஜானகியை மீட்டார் என்பது தான் படத்தின் கதைக்களம்.