Urvashi Rautela : ரூ190 கோடிக்கு மும்பையில் சொகுசு பங்களா வாங்கிய லெஜெண்ட் நடிகை..? உண்மையா?
தி லெஜெண்ட் படத்தின் ஹீரோயின் ஊர்வசி ரவுத்தேலா 190 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை மும்பையின் பிரதான இடத்தில் வாங்கியதாக வெளியான தகவல் திரையுலகத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி லெஜெண்ட் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. மிகவும் பிரபலமான தொழில் அதிபரான லெஜெண்ட் சரவணன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான 'தி லெஜெண்ட்' திரைப்படத்தை ஜெடி - ஜெரி இயக்கியிருந்தனர். அப்படம் பான் இந்தியன் படமாக பெரும் பொருட்செலவில் உருவானது. அப்படத்தில் சரவணன் ஜோடியாக மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் ஊர்வசி ரவுத்தேலா.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கோட்வாரில் பிறந்து வளர்ந்த ஊர்வசி ரவுத்தேலா 2015-ஆம் ஆண்டு மிஸ் திவா பட்டத்தையும் மிஸ் யுனிவர்ஸ் 2015 போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013-ஆம் ஆண்டு 'சிங் சாப் தி கிரேட்' படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் ஊர்வசி ரவுத்தேலா. அதனை தொடர்ந்து சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4 , விர்ஜின் பானுப்ரியா உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்திருந்தார். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ஏராளமான ரசிகர்களை பெற்ற ஊர்வசி ரவுத்தேலா தென்னிந்திய திரைப்படங்களிலும் அறிமுகமானார். அந்த வகையில் 2015ம் ஆண்டு வெளியான 'மிஸ்டர் ஐராவதா' படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகம் பெற்றார்.
தெலுங்கில் வெளியான வால்டர் வீரய்யா படத்தில் ஐட்டம் சாங் ஒன்றுக்கு கலக்கலாக நடனமாடியிருந்தார். மேலும் அவர் நடித்துள்ள பிளாக் ரோஸ் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் கூட பிரான்சில் நடைபெற்ற கான் திரைப்பட விழாவில் பங்கேற்ற ஊர்வசி ரவுத்தேலா தனது வித்தியாசமான தோற்றத்தால் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
இப்படி பாலிவுட்டிலும், தென்னிந்திய சினிமாவிலும் கலக்கி வரும் ஊர்வசி ரவுத்தேலா மும்பையின் பிரதான சாலையில் 4 மாடி கொண்ட சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். அதன் மதிப்பு 190 கோடி. பெரிய பெரிய பாலிவுட் நடிகர்கள் கோடிக்கணக்கில் வீடு வாங்க தயங்கும் நேரத்தில் 29 வயதில் 190 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களாவை வாங்கியுள்ளதாக வெளியான தகவல் திரையுலகத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சொகுசு பங்களாவில் நீச்சல் குளம், ஜிம், யோகா ரூம் மற்றும் வீட்டை சுற்றிலும் அழகான தோட்டம் அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊர்வசியின் புதிய பங்களா பிரபல திரைப்பட தயாரிப்பாளரான யஷ் சோப்ராவின் தோட்டப் பகுதியோடு இணைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இத்தகவலை ஊர்வசியின் தாய் மறுத்துள்ளார்.