ஆயிரம் சூரியன் போல் வந்தார் எம்.ஜி.ஆர்...சரோஜா தேவி எம்.ஜி.ஆர் முதல்முறை சந்தித்த மேஜிக்கல் தருணம்
எம்.ஜி.ஆரை முதல்முறையாக சந்தித்த தருணம் குறித்து மறைந்த மூத்த நடிகை சரோஜா தேவி தனது வாழ்க்கை வரலாற்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

எம்.ஜி.ஆர் சரோஜா தேவி சந்தித்த தருணம்
மூத்த நடிகை சரோஜா தேவி இன்று பெங்களூரில் தனது 87 வயதில் காலமானார். கன்னடத்து பைங்கிளி , அபிநய சரஸ்வதி என பழ பெயர்களால் அறியப்பட்டவர். கன்னட தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்ந்த இவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார். வேறு எந்த நடிகைகளைக் காட்டிலும் அதிகப்படியான படங்களில் எம்.ஜி ஆருடன் இணைந்து நடித்துள்ளார் சரோஜா தேவி . ஆன்ஸ்கிரினில் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி முதல் படத்தில் இருந்தே ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆருடம் மொத்த 26 படங்களில் நடித்துள்ளார் சரோஜா தேவி. எம்.ஜி.ஆரை முதல்முறையாக சந்தித்த தருணம் பற்றியும் இருவரும் இணைந்து நடித்தது குறித்து தனது வாழ்க்கை வரலாற்றில் சரோஜா தேவி குறிப்பிட்டுள்ளார்
ஆயிரம் சூரியன் போல் வந்தார் எம்.ஜி.ஆர்
" இயக்குநர் கே சுப்ரமணியம் இயக்கிய கச்சதேவயானி படத்தின் படப்பிடிப்பு ரேவதி ஸ்டுடியோவில் நடைபெற்று வந்தது. வெளிச்சம் உள்ளே வராமல் தடுக்க கதவு மூடப்பட்டிருந்தது. அப்போது திடீரென்று கதவுகளை திறந்து ஒருவர் உள்ளே வந்தார். ஆயிரம் சூரியன்களின் வெளிச்சம் போல் வந்தார் எம்.ஜி.ஆர். வந்து இயக்குநரிடம் பேசிவிட்டு என்னை யார் என்று கேட்டார். பி.சரோஜா தேவி பெங்களூரில் இருந்து வந்திருக்கிறார் என இயக்குநர் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். கன்னடத்தில் 'நமஸ்காரம்' என்றார். பின் கிளம்பி சென்றுவிட்டார். வந்தார் எல்லாரிடமும் பேசிவிட்டு சென்றுவிட்டார் யார் இவர் என்று நான் கேட்டேன். இவர் தான் எம்.ஜி.ஆர் என்றார்கள். அப்போதுதான் பெங்களூரில் குலேபகாபலி படத்தின் போஸ்டரில் எம்.ஜி.ஆரை பார்த்தது நினைவுக்கு வந்தது.
காலில் ரத்தத்தை பார்த்து பதறிபோன எம்.ஜி.ஆர்
என்னை சந்தித்துவிட்டு சென்றபின் தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்களிடம் என்னை வைத்து படம் தயாரிக்கும்படியும் தான் நடிப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் அப்போது என்னை வைத்து யாரும் படமெடுக்க முடிவு செய்யாததால் அவரே என்னை நாடோடி மன்னன் படத்தில் ஒப்பந்தம் செய்தார். அந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் திருடாதே என்கிற படத்தில் நடித்தோம். அந்த படத்தின் ஒரு காட்சியில் கட்டிலில் எம்.ஜி.ஆர் அமர்ந்திருக்க நான் அவரை சுற்றி வர வேண்டும். அப்படி நான் சுற்றி வருகையில் என் கை பட்டு கண்ணாடி பொருள் ஒன்று கீழே விழுந்து உடைந்துவிட்டது. அதை கவனிக்காமல் நான் ஓடியதால் என் காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி தரை முழுவதும் ரத்தம் பரவியது. அதை பார்த்த எம்.ஜி.ஆர் பதறிப்போய் படப்பிடிப்பை உடனே நிறுத்தச் சொன்னார். பின் என் கால்களை தன் மடியில் வைத்து ஒவ்வொரு கண்ணாடி துண்டுகளாக எடுத்துவிட்டார். பின் தண்ணீர் வைத்து என் கால்களை கழுவினார். " பைத்தியக்கார பொண்ணு கால்ல அடிபட்டா நிக்கவேண்டாமா. இப்படியா ஆடுவ" என அவர் என்மீது கோபித்துக் கொண்டார்" என சரோஜா தேவி கூறியுள்ளார்.





















