Vijayakanth Statue: விஜயகாந்துக்கு முதன்முறையாக சிலை திறப்பு.. மொட்டை அடித்து வணங்கிய தொண்டர்கள்!
Vijayakanth Statue: மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் சிலை தருமபுரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மறைவு
தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் (Vijayakanth) கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் விஜயகாந்தின் மறைவு கவலையில் ஆழ்த்திய நிலையில், அரசியல் தலைவர், சினிமா கலைஞர்கள், ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு சென்று விஜயகாந்துக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள். விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டில் சாமானிய மக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பின் அவரது ரசிகர்கள் இலவசமாக சாப்பாடு போடுவது, நற்பணிகள் மேற்கொள்வது என உதவிகள் செய்து அவரை நினைவு கூர்ந்து வருகிறார்கள். மேலும் விஜயகாந்த் நடித்து வெளிவராமல் போன மூங்கில் கோட்டை படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து மீண்டும் அவரை திரையில் நடமாட விடும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விஜயகாந்துக்கு முதல் முறையாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
ஈமச்சடங்கு
விஜயகாந்தின் மறைவிற்கு இன்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஈமச்சடங்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று மாநில அவைத் தலைவர் இளங்கோவன் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு மொட்டை அடித்து கொண்டனர்.
அப்போது ஆற்றின் கரையோரத்தில் நடைபெற்ற ஈமச்சடங்கின் போது மூன்று கருடன்கள் வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் “கேப்டன் வாழ்க, கேப்டன் விஜயகாந்த் வாழ்க” என கோஷமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாநில அவை தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த விஜயகாந்தின் உருவுச் சிலையை திறந்து வைத்தனர். பின்பு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலில் சிலை நிறுவப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் விஜயகாந்த் அவர்களின் செயல்களைப் பாராட்டு வகையில் அவருக்கு சென்னையில் சிலை வைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. முன்னதாக சேலம் ஆர்.ஆர் பிரியாணியின் உரிமையாளர் ஆர். ஆர் தமிழ்ச்செல்வன் விஜயகாந்துக்கு சென்னை மெரினாவில் சிலை எழுப்புமாறு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Golden Globes 2024: கோல்டன் குளோப் விருதுகளை தட்டித் தூக்கிய கிறிஸ்டோபர் நோலனின் “ஓபன்ஹைமர்” படம்.. முழு பட்டியல் உள்ளே..!