Kusboo : 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு ஆதரவு... கண்டனம் தெரிவித்த கபில் சிபிலுக்கு பதிலடி கொடுத்த குஷ்பூ
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்த குஷ்பூவின் டவீட்டுக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பியுமான கபில் சிபிலுக்கு பதிலடி கொடுத்துள்ளார் குஷ்பூ.
விபுல்ஷா தயாரிப்பில் சுதிப்டோ சென் இயக்கத்தில் மே 5ம் தேதி வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம். ஆதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண்கள் சிலரை கடத்தி மதமாற்றம் செய்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக காட்டப்படுகிறது. இப்படத்திற்கு கேரளா மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
குஷ்பூ ஆதரவு :
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்து பல இடங்களிலும் திரையரங்குகளில் திரையிட தடை விதிக்கப்பட்டாலும் பல பிரபலங்கள் அப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பா.ஜ.க கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பூ 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தனது ஆதரவை ட்விட்டர் மூலம் தெரிவித்து இருந்தார்.
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைத் தடை விதிக்க வலியுறுத்துகிறவர்கள் எதைக் கண்டு பயப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. எதைப் பார்க்க வேண்டும் என்பதில் மக்களைத் தீர்மானிக்க விடுங்கள். நீங்கள் மற்றவர்களுக்காகத் தீர்மானிக்க முடியாது" என தனது ஆதரவை பதிவிட்டு இருந்தார்.
கண்டனம் தெரிவித்த கபில் சிபில் :
நடிகை குஷ்பூவின் இந்த டீவீட்டுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார் முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பியுமான கபில் சிபில். பாஜகவின் குஷ்பு, இந்த கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பொறுத்தமட்டில் எதைப் பார்க்க வேண்டும் என்பதே மக்களைத் தீர்மானிக்க விடுங்கள், மற்றவர்களுக்காக நீங்கள் தீர்மானிக்க முடியாது எனக் கூறியிருக்கிறார். அப்படி என்றால் அமீர்கானின் பி கே, ஷாருக்கானின் பதான், பஜ்ராவ் மஸ்தானி போன்ற படங்களுக்கு ஏன் போராட்டங்கள் நடத்தப்பட்டன? வெறுப்பை தூண்டுவதை ஆதரியுங்கள் என்பது தான் உங்கள் அரசியல் என ட்விட்டர் மூலம் குஷ்பூவின் பதிவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஷ்பூ பதிலடி :
அவரின் பதிவுக்கு பதிலளித்துள்ளார் குஷ்பூ. அதில் "உண்மையை புரிந்து கொள்ளாமல் நீங்கள் பேசுவது வருத்தமாக உள்ளது கபில் ஜி. நீங்கள் கூறிய எந்த படத்தையும் பா.ஜ.க எதிர்க்கவில்லை. உங்கள் பொய்களை ஆதரிப்பதற்காக எதிர்ப்பு தெரிவிப்பதை காட்டுகிறது. அவர்களை பாஜகவுடன் இணைத்தால், நீங்கள் எவ்வளவு அவநம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எனது ஆழ்ந்த அனுதாபங்கள் எப்போதும் உண்டு" என தெரிவித்துள்ளார் குஷ்பூ.