‛காத்திருங்கள் அறிவிக்கிறேன்...’ புதிய முடிவை வீடியோவில் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் இயற்கைப் பொருள்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக கடந்த 2000 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படம் நாயகியாக அறிமுகமானார்.
பிறகு தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் படம் மூலம் இயக்குநர் ஏ.எல்.விஜய், கீர்த்தி சுரேஷை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, நடிகையர் திலகம் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. கீர்த்தி சுரேஷ் நடித்த படங்களிலே அவருக்கு விமர்சன ரீதியாகப் பெயர் வாங்கி கொடுத்த படம் இது என்றே சொல்லாம். மேலும் சாவித்திரி கதாபாத்திரமாகவே இந்த படத்தில் அவர் வாழ்ந்ததால் அவருக்குத் தேசிய விருது கிடைத்தது.
திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது கைவசம், அரை டஜன் படங்களை வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வரவிருக்கும் புதிய முயற்சி பற்றி குறித்த அறிவிப்பைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதில், "எனது வரவிருக்கும் முயற்சி இயற்கையின் சக்தியைத் தழுவுவதாகும். எனது புதிய முயற்சியை உருவாக்கும் போது மிகவும் வேடிக்கையாக இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் கீர்த்தி எதைப் பற்றி சொல்ல வருகிறார் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
View this post on Instagram
இதனையடுத்து கீர்த்தி சுரேஷ் இதுகுறித்த வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அதில், "இயற்கை சார்ந்த பொருள்களைப் பயன்படுத்துவதில் நான் மிகவும் ஆர்வத்துடனும், கவனத்துடனும் செயல்படுவேன்.
இயற்கைப் பொருள்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளேன். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் அதுவரை காத்திருங்கள்" எனப் பேசியுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷின் இந்த முயற்சிக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் படத்திலும் இயற்கை சார்ந்த விஷயங்களில் நடித்து மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்த இயற்கைப் பொருள் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக ரசிகர்கள் அவரது கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் பலரும் நடிப்பது மட்டுமின்றி சமூக சார்ந்த பிரச்சனைக்குக் குரல் கொடுப்பது, சமூகத்தின் மீது அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர்.
நடிகை கீர்த்தி நடிப்பில் தற்போது தமிழில் அண்ணாத்த, சாணிக் காயிதம் தெலுங்கில் சர்க்கார் வரி பாட்டா, மலையாளத்தில் வாஷி டாக்கர் ஆகிய படங்கள் தயாராகி வருகிறது.