Keerthi Pandian: என்னை உருவக்கேலி செய்யறவங்க மனச என்னால் புரிஞ்சுக்க முடியுது.. கீர்த்தி பாண்டியன் பளிச்!
Keerthi pandian: உருவக் கேலி என்பது நான் இப்போது மட்டும் அல்ல என்னுடைய பள்ளிப்பருவத்தில் இருந்தே அனுபவிக்கும் ஒன்று தான் என கீர்த்தி பாண்டியன் பேசியுள்ளார்.
80களின் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருந்த அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனும் தற்போது பலராலும் அறியப்பட்ட நடிகையாக வலம் வருகிறார். நடிகர் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் பல ஆண்டுகள் டேட்டிங் செய்த பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் தான் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணம் முடிந்த பிறகு கீர்த்தி பாண்டியனை உருவக் கேலி செய்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. அவை அனைத்திற்கும் தகுந்த பதிலடியை கொடுத்தார் அசோக் செல்வன்.
கண்ணகியில் கீர்த்தி :
இந்நிலையில், யூடியூபர் யஷ்வந்த் கிஷோர் இயக்குநராக அறிமுகமாகும் 'கண்ணகி' திரைப்படத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்கலில் நடித்துள்ளனர். டிசம்பர் 15ம் வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கண்ணகி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மிகவும் பிஸியாக ஈடுபட்டு வரும் கீர்த்தி பாண்டியன் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தான் எதிர்கொண்ட உருவக்கேலி குறித்த கருத்தினை வெளிப்படையாக பேசி இருந்தார்.
உருவக் கேலி :
“நான் ஒரு பப்ளிக் பர்சனாக இருப்பதால் மற்றவர்கள் என்னை விமர்சனம் செய்கிறார்கள் என்பது வெளியில் தெரிகிறது. ஆனால் சராசரி வாழ்க்கையில் இருக்கும் பலரும் இது போன்ற விமர்சனங்களை எதிர்கொண்டு தான் இருக்கிறார்கள்.
உருவக் கேலி என்பது நான் இப்போது மட்டும் அல்ல, என்னுடைய பள்ளிப்பருவத்தில் இருந்தே அனுபவிக்கும் ஒன்று தான். அந்த சமயத்தில் நான் மிகவும் குள்ளமாக, இன்னும் ஒல்லியாக, பயங்கர கருப்பாக தான் இருப்பேன். நான் பெரும்பாலும் வெயிலிலேயே தான் இருப்பேன். ஸ்கூலில் கூட நான் முக்கால்வாசி நேரம் பிளே கிரௌண்டில் தான் இருப்பேன். அப்போது மற்றவர்கள் என்னைக் கேலி செய்தது எனக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. ஆனால் அன்று நான் எதிர்கொண்ட அந்த விமர்சனங்கள் தான் இன்று என்னை பலப்படுத்தியுள்ளது.
என்னை விமர்சனம் செய்பவர்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆழ்மனதில் வலியோடு இருப்பவர்கள் தான் மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது அதை தாங்கிக் கொள்ள மனம் இல்லாமல் அவர்களை கீழ்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக இது போன்ற விமர்சனங்களால் மற்றவர்களை காயப்படுத்துவார்கள். அதை நான் பொருட்படுத்துவதில்லை” என மிகவும் துணிச்சலாக பேசியுள்ளார்.
உடல் எடை அதிகரிப்பு :
கண்ணகி திரைப்படத்தில் கர்ப்பிணியாக நடித்துள்ள கீர்த்தி பாண்டியன் அந்தக் கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையை மூன்றே மாதத்தில் 10 கிலோ வரை அதிகரித்துள்ளார். அதற்காக கடுமையாக உழைத்துள்ளார். 8 வேளை உணவு, தெடர்ந்து ஜிம் பயிற்சி என மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். இந்த உடல் எடை அதிகரிக்கும் ப்ராசஸ் கொரோனா காலகட்டத்தில் நடைபெற்றதால், கொரோனா ஊரடங்கு விலக்கப்பட்ட பிறகு கீர்த்தியை பார்த்த அசோக் செல்வனே ஷாக்காகிவிட்டாராம்.
ஒரே நாளில் ரிலீஸ் :
கீர்த்தி பாண்டியனின் 'கண்ணகி' வெளியாகும் அதே தினத்தில் தான் அவரின் கணவரும் நடிகருமான அசோக் செல்வனின் 'சபாநாயகர்' திரைப்படமும் வெளியாக உள்ளது. கணவன் - மனைவி இருவரின் படமும் ஒரே நாளில் வெளியாவது அவர்களின் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.