Vairamuthu: “பேச்சை சர்ச்சையாக்க வேண்டாம்..சமாளிக்க முடியல” - கவிஞர் வைரமுத்து ஓபன் டாக்!
சினிமாவை எப்படி உருவாக்குகிறீர்கள் என்பது தான் இன்றைய நிலையில் மிக முக்கியம் என சொன்னேன். வெற்றியும் தோல்வியும் படம் மேக்கிங்கில் தான் உள்ளது என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
என் பாட்டில் இருந்த பல வார்த்தைகள் படத்தின் தலைப்புகளாக வைப்பது பற்றி நான் கவலைப்படுவதில்லை என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “வேட்டைக்காரி”. இந்த படத்தின் கதையை கேட்டதும் கவிஞர் வைரமுத்து தான் டைட்டிலை பரிந்துரைத்துள்ளார். வேட்டைக்காரி படத்தில் ராகுல், சஞ்சனா சிங், வின்செண்ட் அசோகன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.கே.ராம்ஜி இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரித்துள்ளார். இந்த படத்துக்கான பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் அமைச்சர் பெரிய கருப்பன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, “இந்த படத்தின் இயக்குநர் காளிமுத்து என்னை வந்து சந்தித்து கதை சொன்னார். ரொம்ப பிடித்திருந்தது. சினிமாவை எப்படி உருவாக்குகிறீர்கள் என்பது தான் இன்றைய நிலையில் மிக முக்கியம் என சொன்னேன். வெற்றியும் தோல்வியும் படம் மேக்கிங்கில் தான் உள்ளது. படம் வெற்றி பெறும் நம்பிக்கையில் தான் வேட்டைக்காரி என தலைப்பு கொடுத்தேன்.
என் பாட்டில் இருந்த பல வார்த்தைகள் படத்தின் தலைப்புகளாக வந்துள்ளது. எத்தனை பேர் என்னை ரகசியமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை நான் அறிய மாட்டேன். அவர்கள் யாரும் வந்து என்னிடம் நேராக கேட்டோ, தொலைபேசியில் பேசியோ இந்த தலைப்பை பயன்படுத்தியது இல்லை. அத்தனை பேரும் வைரமுத்து நமக்கானவர் என்ற உரிமையில் எடுத்துக் கொள்கிறார்கள். எப்படியோ நல்ல வழியில் தமிழ் கொழிக்க, செழிக்க வேண்டும்.
நல்ல தமிழ் தலைப்புகளை கேட்கும்போது சமுதாயத்தில் பல்வேறு படிநிலைகளில் சுழற்சி முறையில் பயன்பாட்டில் கொண்டிருக்கிறது. அதேபோல் சினிமா தன் தளத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. அது ஒருநாளும் அழிந்து விடாது. மனிதன் இருக்கும் வரை சினிமா இருக்கும். சினிமா என்பது கலைத்தேவை.மாறுதலின் தேவையை புரிந்து கொண்டு கலைஞர்கள் நடைபோட வேண்டும்.
அப்போது வைரமுத்துவின் முந்தைய பேச்சை சர்ச்சையானதை மறைமுகமாக குறிப்பிட்டு, “தயவு செய்து இந்த பேச்சில் சர்ச்சையாக்கி விட வேண்டாம். அதை எங்களால் சமாளிக்க முடியவில்லை” என கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய இயக்குநர் காளிமுத்து காத்தமுத்து, ‘வேட்டைக்காரி படத்தின் 2ஆம் பாகத்துக்கு கவிஞர் வைரமுத்து தான் பாடல்கள் எழுதுவதோடு இசையமைக்கவும் உள்ளார் என தெரிவித்தார்.