Kanguva: கங்குவா படத்துக்கு புது வில்லன்! தப்புமா ரூ.350 கோடி? கலக்கத்தில் சூர்யா ஃபேன்ஸ்!
கங்குவா படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கனமழை பெய்ய இருப்பதால் வசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் திரைப்படம் கங்குவா. கோலிவுட்டின் முன்னணி நாயகனாக திகழும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் அவரது திரை வாழ்வில் உருவான படங்களிலே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் ஆகும்.
நாளை மறுநாள் கங்குவா:
சூர்யா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு நிகரான கதாபாத்திரத்தில் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். திஷா பதோனி நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் மொத்தம் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. இந்தாண்டு தமிழில் வெளியாகும் திரைப்படங்களிலே மிகப்பெரிய பட்ஜெட் படமாக இந்த படம் அமைந்துள்ளது.
கங்குவா படம் தீபாவளி வெளியீடாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளியானது. ரஜினிகாந்தின் படத்துடன் வெளியானால் வசூல் பாதிக்கப்படும் என்பதால் கங்குவா படத்தின் ரிலீசை படக்குழு ஒத்திவைத்தது. இதையடுத்து, கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
காத்திருக்கும் கனமழை:
படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் என வட தமிழகத்தில் மழையின் தாக்கம் அதிகளவு இருக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டை நோக்கி குறைந்த வேகத்தில் நகர்ந்து வருவதால் தமிழ்நாட்டில் வரும் 18ம் தேதி வரை மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. படம் நாளை மறுநாளான 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில், மழை அடுத்த ஒரு வாரத்திற்கு இருக்கும் என்ற அறிவிப்பால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
தப்புமா ரூ.350 கோடி?
ஏனென்றால் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்தால் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் கூட்டம் மிக கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகளவு உள்ளது. தீபாவளி விருந்தாக திரையரங்கில் வெளியான வேட்டையன் படம் திரையரங்கில் வெளியாகிய 4 நாட்களிலே தமிழ்நாடு முழுவதும் மழையின் தாக்கம் தீவிரம் அடைந்தது. இதனால், தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இதனால், படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக எதிர்பார்த்த வசூலையும் பெற இயவில்லை.
தற்போது அதேபோல ஒரு சூழலை கங்குவா எதிர்கொண்டுள்ளது. வேட்டையன் படம் வெளியாகி 4 நாட்கள் கழித்தே மழையின் தீவிரம் இருந்தது, ஆனால், கங்குவா படம் வெளியாகும்போதே கனமழை அபாயம் இருப்பதால் இது படத்தின் வசூலை பாதிக்குமா? என்ற அபாயமும் படக்குழு மத்தியில் எழுந்துள்ளது.
அச்சத்தில் படக்குழு:
கங்குவா படத்திற்கு சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் திவாலான லால் என்பவருக்கு செலுத்த வேண்டிய ரூபாய் 20 கோடியை சொத்தாட்சியருக்கு செலுத்தினால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் உருவாகியுள்ள கனமழை அபாயமும் கங்குவா படத்திற்கு புது வில்லனாக உருவெடுத்துள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடத்திலும் இந்த படத்திற்காக மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.