Kalaingar 100 function: முற்போக்கு சிந்தனையாளர்; சீர்திருத்தவாதி... திரையுலகை பலப்படுத்திய கலைஞருக்கு நூற்றாண்டு விழா...
Kalaingar 100 : கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் அவர்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்த் திரையுலகினர் அவருக்கு விழா ஒன்றை பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ளனர். திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் கலைஞர் கருணாநிதி. மேலும் தமிழகத்தின் முதல்வராக இருந்து திரைத்துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர்.
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று மாலை சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸில் துவங்கியுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நடிகை ரோகினி :
அந்த வகையில் பாடலாசிரியர், டப்பிங் கலைஞர், இயக்குநர் ரோகினி கலந்து கொண்டுள்ளார். அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் "தமிழ் எழுத்தை தன்னுடைய ஆயுதமாக பயன்படுத்திய ஒரு கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், முற்போக்கு சிந்தனையாளர், சீத்திருத்தவாதி. அவரை திரைதுறையினராக நாங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவது மிகப்பெரிய சந்தோஷம்.
நடிகர் சங்கத்துக்கு மிகப்பெரிய ஒரு பெருமையை சேர்த்தது கேப்டன் விஜயகாந்த். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காலகட்டத்தில் துவங்கப்பட்ட நடிகர் சங்கத்தின் பெருமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் நடிகர் விஜயகாந்த். அவரின் இந்த திரைத்துறை இழந்தது மிக பெரிய சோகம் தான்" என பேசியிருந்தார்.
எஸ்.பி. முத்துராமன் :
கலைஞருடைய விழாவை திரைத்துறையினர் சேர்ந்து கொண்டாடி வருகிறோம். திரைத்துறைக்கு அவர் செய்த பணிகள், அவரின் வசனங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கு தேடி தந்த பெருமை அவரை சேரும். அதே போல திரையுலகம் பலவீனமாக இருந்த போதெல்லாம் அதை ஊக்குவித்து பலப்படுத்தியவர். அதற்காக எங்களின் உள்ளம் நிறைந்த நன்றிகளை திரையுலத்தின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
நடிகர் சரவணன் :
100 ஆண்டுகள் ஒருவர் கொண்டாடுகிறார்கள் என்றால் அது மிக பெரிய விஷயம். எராளமான சாதனைகளை செய்த கலைஞர் அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்துவது சந்தோஷம். அதில் நானும் ஒருவனாக கலந்து கொண்டுள்ளதில் மகிழ்ச்சி என தெரிவித்து இருந்தார்.
நடிகர் சந்தானபாரதி :
கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிக்க மகிழ்ச்சி என தெரிவித்தார்.
இயக்குநர் தங்கர் பச்சான் :
கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் தங்கர் பச்சான், அவருடைய ஆட்சி காலத்தில் நான் 8 விருதுகள் பெற்றேன். பெரியார் பற்றின படத்தின் பணிகளை செய்யும் போது அவருடன் நெருங்கி பழக கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த திரைதுறையுடைய மிக முக்கியமான முன்னோடி என கூறியிருந்தார்.
கூல் சுரேஷ் :
கலைஞரின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் கூல் சுரேஷ் அனைவரும் எந்த ஒரு சண்டையும் இன்றி ஜாதி வித்தியாசங்கள் பார்க்காமல் ஒற்றுமையாக வாழவேண்டும். இந்த விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.
தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி :
இந்த திரையுலகத்திற்கு கலைஞர் ஏராளமான நல்ல விஷயங்களை செய்துள்ளார். அவருக்கு இந்த விழா நடத்துவதில் பெருமை என கூறினார்.

