Kalaignar 100: ”கருணாநிதியின் பண்பு முதலமைச்சர் ஸ்டாலினிடம் உள்ளது” - கலைஞர் 100 விழாவில் புகழ்ந்த கமல்ஹாசன்
Kalaignar 100 Function: "எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய ஆளுமைகளை தன் எழுத்தால் உச்ச நட்சத்திரம் ஆக்கியவர் கலைஞர்" என கலைஞர் 100 விழாவில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
Kalaignar 100 Function: சிறுவயதில் என் அக்காவிடம் கலைஞர் மாதிரி ஹேர்ஸ்டைல் வைத்து விடுங்கள் என்று கேட்பேன் என கலைஞர் 100 விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பேசியுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் கலைஞர் 100 விழா சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் திரை ஜாம்பவான்களான ரஜினி, கமல்ஹாசன், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட அனைத்து உச்சக்கட்ட நடிகர்களும், திரைப்பட தயாரிப்பாளார்களும், இயக்குநர்களும், திரைக்கலைஞர்களும் பங்கேற்றனர். அதேபோல் நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கௌதமி, ரோஜா நடிகர்கள் சிவராஜ்குமார், வடிவேலு, கார்த்தி, பார்த்திபன், ஆர்.ஜே. பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், தங்கர் பச்சான், டி.ரேஜேந்திரன், ஷங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்ற கமல்ஹாசன் விழா மேடையின் ஒரு ஒரத்தில் நின்று பேசினார். அப்போது அவர் பேச்சினை தொடங்கும்போது, “ என்னடா ஒரு ஓரமா நின்னு பேசறேன்னு நினைக்கறீங்களா? கலைஞர் மேடையில் நான் எப்போதும் ஒரு ஓரமாத்தான் இருப்பேன் என பேசி தனது பேச்சினை தொடங்கினார். இதற்கு அனைவரும் கரகோசம் எழுப்பினர்.
கலைஞர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆர் எனது தமிழ் ஆசான்கள் என பேசிய கமல்ஹாசன், ”கலைஞரும் தமிழும், கலைஞரும் சினிமாவும், கலைஞரும் அரசியலும் பிரிக்க முடியாதவை. பாடல்கள் பிடியில் இருந்த சினிமாவை வசனம் வசப்படுத்தியவர் கலைஞர். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய ஆளுமைகளை தன் எழுத்தால் உச்ச நட்சத்திரம் ஆக்கியவர் கலைஞர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களுடன் உரையாடுவதை விடக்கூடாது என்று அவரிடம் கற்றதால் தான் பிக்பாஸ் மூலம் மக்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்.
கலைஞர் எப்போதும் தன்னை கலை உலகின் பிரதிநிதியாகவே காட்டிக்கொள்ள விரும்பினார். அவர் எனக்கு சூட்டிய கலைஞானி என்ற பட்டத்தை என்றும் மறக்க மாட்டேன். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பண்புக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த பண்பு எங்கிருந்து கற்றுக்கொண்டது என்பது நமக்கு நன்றாகவே தெரியும். கலைஞரின் பண்பு முதலமைச்சரிடம் உள்ளது. ” என்றார்.
மேலும், ”கலைஞர் தான் நவீன தமிழ் சினிமாவின் வசன நிற்பி என்று சொன்னால் மிகை ஆகாது. சிறுவயதில் என் அக்காவிடம் கலைஞர் மாதிரி ஹேர்ஸ்டைல் வைத்து விடுங்கள் என்று சொல்வேன்” என கூறி அரங்கை அதிரவைத்தார்.
மேலும் படிக்க: Kalaingar 100: “ரூ.540 கோடியில் திரைப்பட நகரம் அமைக்கப்படும்” - கலைஞர் 100 விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு