சாதி வெறியரா ? சமூக செயற்பாட்டாளரா ? காடுவெட்டி குருவின் சுயசரிதை எப்படி இருக்கு...படையாண்ட மாவீரா விமர்சனம் இதோ
Padaiyaanda maaveeraa movie review : காடுவெட்டி குருவின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ள படையாண்ட மாவீரா திரைப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

2000 முதல் 2018 வரை வட தமிழ்நாட்டின் அரசியலில் மிக அதிகமாக பேசப்பட்ட பெயர் மறைந்த காடுவெட்டி குரு. அவரைப் பற்றிய கருத்துகள் எப்போதும் இரண்டு முனைகளில் இருந்தன – ஒருபக்கம் அவரை ஜாதி சார்பாளர், வன்முறையாளர் என்று விமர்சித்தவர்கள்; மறுபக்கம் அனைத்து சமூகத்திற்கும் பொதுவானவர், மக்களுக்காக எதையும் செய்யத் தயங்காத ஆளுமை என்று பாராட்டியவர்கள். இந்த சர்ச்சைக்குரிய அரசியல் தலைவரின் வாழ்க்கையை மையமாக வைத்து வா.கெளதமன் இயக்கியுள்ள படம் தான் படையாண்ட மாவீரா. கெளதமன் அவரே குருவின் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 'படையாண்ட மாவீரா படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்
படையாண்ட மாவீரா விமர்சனம்
கதை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தொடங்குகிறது. மக்களுக்காக பணி செய்து வந்த குருவின் தந்தை, உள்ளாட்சி தேர்தல் முன் பகைமையால் படுகொலை செய்யப்படுகிறார். சிறுவனாக இருந்த குரு வளர்ந்து பெரியவனாகி, தந்தையை கொன்றவரை வன்முறையாக பழி வாங்குகிறார். சிறைத் தண்டனை முடித்து வெளிவந்த பிறகு தனது சமூகத்தை மட்டுமின்றி, அனைத்து சமூகங்களுக்கும் நல்லது செய்யும் தலைவராக மாறுகிறார். இதன் விளைவாக அவரது சமூக அரசியல் கட்சி அவருக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு அளிக்கிறது. குருவின் உயர்ந்து வரும் செல்வாக்கை கட்டுப்படுத்த அரசாங்கம் ஒரு உயர் போலீஸ் அதிகாரியை அந்த பகுதியில் நியமிக்கிறது. அவர் தனது அதிகாரத்தையும் தந்திரத்தையும் பயன்படுத்தி குருவின் தாக்கத்தை குறைக்க முயல்கிறார். அந்த முயற்சி வெற்றி அடைந்ததா, அல்லது குரு போராட்டத்தில் வென்றாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
கௌதமனின் நடிப்பு படத்தின் பலம். போலீஸ் அதிகாரியாக வரும் பாகுபலி பிரபாகர் கதாபாத்திரத்திலும் அவரது காட்சி நடிப்பிலும் தனித்தன்மை தெரிகிறது. குருவின் சமூக பணிகளை சுட்டிக்காட்டும் விதமாக குரு சட்டமன்ற உறுப்பினராகி சமூக நல்லிணக்கத்திற்காக அம்பேத்கர் சிலைகளை பல இடங்களில் நிறுவுவது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஆலை விரிவாக்கத்தால் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுவதை தடுக்க மக்கள் போராட்டத்தில் இணைவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன
வரலாற்று உண்மைகளை விட சினிமாவிற்காக ஹைலைட் செய்து சார்புடன் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. காடுவெட்டி குருவைப் பற்றி அவர் சார்ந்த சமூகம் எந்த மாதிரியான ஒரு பொது பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறதோ அதையே படமும் காட்டுகிறது. தனிப்பட்ட முறையில் அவரது சாதிய சார்புகள் எந்த விதத்திலும் கேள்விக்குட்படுத்தப் படவில்லை “நாம் ராஜராஜ சோழனின் வம்சம், ராஜேந்திர சோழன் எங்கள் மூப்பாட்டன்” என நிஜ வாழ்க்கையில் அவர் பேசிய அபத்தங்களையே திருப்பி ஏன் படத்திலும் எடுத்துவைக்க வேண்டும். ஒரு தலைவர் அவர் எந்த சாதிய சார்புடையவராகவே இருந்தாலும் பொதுப் புத்திக்கு மீறி அவரது வாழ்க்கையில் ஒரு தனிப்பட்ட வெளிச்சத்தை பாய்ச்ச முயல்வதே கலைப்படைப்பாக முடியுமே ஒழிய அந்த தலைவரை நியாயப்படுத்துவது அல்ல.
மொத்தத்தில் படையாண்ட மாவீரா திரைப்படம் ஏற்கனவே காடுவெட்டி குருவைப் பற்றி முன்வைக்கப்படும் கருத்தியல்களையே பிரதி செய்திருக்கிறதே தவிர தனிப்பட்ட கண்டடைதல்களை முன்வைப்பதில்லை. இத்துடன் சினிமா காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு சினிமா சாயல் பூசி ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார்கள்





















