Jana Nayagan Censor: விஜய் அண்ணா வந்தால் தான் எங்களுக்கு பொங்கல்.. ஜனநாயகனுக்கு ஆதரவாக களமிறங்கிய ரவி மோகன்!
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்கவுள்ள நிலையில், அவரின் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் மிகப்பெரிய அளவில் அரசியல் செய்யப்படுவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதுதொடர்பாக பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜனநாயகன் படம்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “ஜனநாயகன்”. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த படம் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, நரேன், பிரியாமணி, பிரகாஷ்ராஜ், பாபி தியோல் என பலரும் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இப்படம் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் மிகப்பெரிய சிக்கலில் மாட்டியுள்ளது.
ஜனநாயகன் படத்தில் இந்து மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு துறை அடையாளங்கள் பயன்படுத்த முறைப்படி தடையில்லா சான்றிதழ் பெறவில்லை எனவும் சொல்லப்படுகிறது. தணிக்கை சான்றிதழ் தொடர்பாக கேவிஎன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளாது. ஆனால் இவ்வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் படம் திட்டமிட்டபடி ரிலீசாகாது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவ்வளவு தான். ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் தமிழக அரசு, மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் களமிறங்கவுள்ள நிலையில், அவரின் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் மிகப்பெரிய அளவில் அரசியல் செய்யப்படுவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். விஜய்க்கு ஆதரவாக இயக்குநர்கள் அஜய் ஞானமுத்து, சண்முகம் முத்துசாமி, நடிகர் சிபிராஜ், நடிகை சனம் ஷெட்டி போன்றோர் சமூக வலைத்தளங்களில் பதிவு வெளியிட்டனர்.
நடிகர் ஜெயம் ரவி பதிவு
இந்த நிலையில் விஜய்யின் மிகப்பெரிய ரசிகராக அறியப்படும் ரவி மோகன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மனம் உடைந்தது விஜய் அண்ணா... ஒரு சகோதரனாக, உங்கள் பக்கத்தில் இருக்கும் லட்சக்கணக்கான சகோதரர்களில் ஒருவராக நான் உங்களுடன் நிற்கிறேன். உங்களுக்கு என ஒரு தேதி தேவையில்லை.. நீங்கள் தான் தொடக்க விழாவே... அந்த தேதி எப்போது வந்தாலும்.. பொங்கல் அப்போதுதான் தொடங்கும். #istandwithvijayanna” என தெரிவித்துள்ளார்.
Heartbroken 💔 @actorvijay Anna.. as a brother I’m standing with you as one among the millions of brothers beside you. You don’t need a date.. you are the opening. Whenever that date is.. Pongal only starts then. #istandwithvijayanna pic.twitter.com/ccFy6iK4qM
— Ravi Mohan (@iam_RaviMohan) January 8, 2026
இதேபோல் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவில், “ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தணிக்கை வாரியம் சான்றிதழ் தர மறுப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. இது தமிழ் திரையுலகத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல். நமது அரசியல் சார்பு,விருப்பு வெறுப்புகளைத் தாண்டி கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் இதைக் கண்டிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.





















