திக்..திக்..திக்.. மெட்ரோ ரயிலில் துடித்த இதயம்.! வெறும் 9 நிமிடத்தில் ஏர்போர்ட் டூ டிஎம்ஸ்- அசத்திய மருத்துவர்கள்
உடல் உறுப்பு தானத்தால் பலருக்கு மறுவாழ்வு கிடைத்து வரும் நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு இதயம் மற்றும் நுரையீரல் மின்னல் வேகத்தில் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை டூ சென்னை- விமானத்தில் பறந்த இதயம்
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பல மணி நேரம் பிடிக்கும். அதிலும் பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை மற்றும் மாலை பள்ளி, அலுவலக நேரம் என்றால் கேட்கவே வேண்டாம். அந்த வகையில் உடல் உறுப்பு தானம் மூலம் வழங்கப்பட்ட இரதயத்தை குறிப்பிட காலத்தில் பொருத்த வேண்டும், இல்லையென்றால் அதற்கு பயனில்லாமல் போய்விடும். எனவே மதுரையில் மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது உறவினர்கள் முடிவு செய்தனர். அதன் படி மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை நிர்வாகமும் தயாரானது.
சென்னை மெட்ரோவில் மின்னல் வேக பயணம்
ஆனால் அந்த நபருடைய உடல் உறுப்புகள் தானம் பொருந்தக்கூடிய நபர் சென்னையில் உள்ளார். எனவே மதுரையில் இருந்து சென்னைக்கு குறிப்பிட்ட நேரத்தில் வர வேண்டும், அதிலும் சென்னைக்குள் வந்த பிறகு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டிய நிலை உருவாகும். இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் மூலம் விரைவாக மருத்துவமனைக்கு உடல் உறுப்புகளை கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டது. இதன் படி, மதுரையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் தானம் செய்யப்பட்ட இதயம் மற்றும் நுரையீரலை பாதுகாப்பாக கொண்டு வந்த மருத்துவ குழுவினர், சென்னை விமான நிலையத்திலிருந்து மீனாம்பாக்கம் மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தனர்.
9 நிமிடத்தில் இலக்கை அடைந்த இதயம்
அங்கு ஏற்கனவே தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சென்னை மெட்ரோ ரயில் மின்னல் வேகத்தில் புறப்பட்டது. மெட்ரோ ரயில் நிலைய அலுவலர்கள் மற்றும் நிலைய பணியாளர்களின் முழு ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்புடன், அந்தக் குழுவினர் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மெட்ரோ இரயிலில் ஏறி இடைப்பட்ட எந்த மெட்ரோ இரயில் நிலையங்களிலும் நிற்காமல் ஏழு நிலையங்களை 9 நிமிடத்தில் கடந்து, ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையத்தை பாதுகாப்பாக வந்தடைந்தனர்.
அங்கிருந்து, மருத்துவக் குழுவினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு நுரையீரல் மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த சம்பவம் சென்னையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






















