James Vasanthan On Vijay: ‘பொது இடத்துக்கு இப்படியா வர்றது.. பொறுப்பு வேண்டாமா’; விஜயை விமர்சித்த பிரபல இசையமைப்பாளர்!
James Vasanthan On Vijay:‘வாரிசு’ இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் வந்திருந்த தோற்றத்தை பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விமர்சனம் செய்துள்ளார்.
![James Vasanthan On Vijay: ‘பொது இடத்துக்கு இப்படியா வர்றது.. பொறுப்பு வேண்டாமா’; விஜயை விமர்சித்த பிரபல இசையமைப்பாளர்! James Vasanthan criticized Actor Vijay's Look on Varisu Audio Launch in his facebook page James Vasanthan On Vijay: ‘பொது இடத்துக்கு இப்படியா வர்றது.. பொறுப்பு வேண்டாமா’; விஜயை விமர்சித்த பிரபல இசையமைப்பாளர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/02/dee55184a916b87e95142db659ddc8c41672643223254501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சுப்பிரமணியபுரம், பசங்க, நாணயம் போன்ற பிரபலமான படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இதில், குறிப்பாக சுப்பிரமணியபுரம் படத்திற்காக பலரது வரவேற்ப்பையும் பாராட்டையும் பெற்றாவர். சன் டிவி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், ஜேம்ஸ் வசந்தன். விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான ‘ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். அவ்வப்போது, அரசியல் சார்ந்த விமர்சனங்களையும் முன் வைப்பவர். இவர், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் வந்திருந்த தோற்றம் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.
ஜேம்ஸ் வசந்தன் ஃபேஸ்புக் பதிவு:
விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதைப்பார்த்த ஜேம்ஸ் வசந்தன், வாரிசு பட விழாவிற்கு விஜய் வந்திருந்த தோற்றம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில். ”வாரிசு பட விழா தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது. தற்செயலாக ஒரு கணம் எட்டிப்பார்த்தேன். விஜய் பேசிக்கொண்டிருந்தார். முதல் பார்வையிலேயே அவர் தோற்றம் மனதைச் சற்று நெருடியது. தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி, தாடியைக் கொஞ்சம் நெறிபடுத்தி, இந்த பிரமாண்ட விழாமேடைக்கேற்ற உடையணிந்திருக்கலாம் என்று தோன்றியது.
அது எளிமை என்று அவர் நினைத்திருக்கலாம்; அல்லது அவர் ரசிகர் வாதிடலாம். Simplicity and appropriateness are two different things. எளிமையும், அவைப் பொருத்தமும் வெவ்வேறு விஷயங்கள். இதைப் பொதுவாகத்தான் சொல்கிறேன். நாம் ஒரு வேலைக்கு, நேர்முகத் தேர்வுக்கு போகும்போது ஏன் அவ்வளவு பொறுப்பாக பார்த்துப் பார்த்து உடையணிந்து செல்கிறோம்? ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற தோற்ற வரைமுறை உண்டுதானே?
சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்டாயம்
ஒரு நடிகனின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே கிரகிக்கிற, பின்பற்றுகிற பாமர ரசிகர்மேல் கதாநாயகர்கள், அதுவும் விஜய் போன்ற உட்சபச்ச நாயகன் ஏற்படுத்துகிற தாக்கம் அதி தீவிரமானது; தன் திரை நாயகனை அன்றாட வாழ்வில் ஒவ்வொரு அசைவிலும் பிரதிபலிக்கிற கடைநிலை இளைஞனுக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.
சினிமாவும் கிரிக்கெட்டும் உயிர்மூச்சு
எந்த நிகழ்வுக்கு எப்படி உடையணிந்து செல்லவேண்டும் என்பதை அவன் எங்கே போய் கற்றுக்கொள்வான்? சினிமாவும், கிரிக்கெட்டும் உயிர்மூச்சாக ஆகிவிட்ட இந்தியாவில், இத்துறைகளில் உள்ளவர்க்கென்று சில பொறுப்புகள் உள்ளன. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். நீங்கள் திரைப்படங்களில் எல்லாவித ஆடம்பர ஆடைகளையும் அணிந்து சலித்துப்போய் நிஜவாழ்வில் இப்படி எளிமையாக இருக்க விரும்புவதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆந்திராவில் அலட்சியம் இல்லை.
ஆனாலும் பொதுமேடையாயிற்றே. வெறித்தனமான இளைஞன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறானே. ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும், ஆந்திராவிலும் கூட யாருமே இந்த அம்சத்தில் அலட்சியம் காட்டுவதில்லையே. நட்சத்திரங்கள் வசதியானவர்கள் என்பது வெட்டவெளிச்சந்தானே. யாரும் உங்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். தன் நாயகன் அழகாக வந்தால் முதலில் மகிழ்பவன் உங்கள் ரசிகன்தான்! முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள்.விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)