பல தியேட்டர்களை சூறையாடிய இணைந்த கைகள்... 32 ஆண்டுகளுக்கு முன் இன்று நடந்த சம்பவம் தெரியுமா?
Inaindha Kaigal: வெளிமாநிலத்திலேயே இந்த நிலை என்றால், தமிழ்நாட்டில் எப்படி இருந்திருக்கும்?
ஓடும் குதிரையில் பந்தயம் கட்டிக் கொண்டிருந்த காலகட்டத்தில், குட்டிக் குதிரைகளை நம்பி களமிறங்கியவர் ஆபாவாணன். திரைப்படக்கல்லூரி மாணவர்களை வைத்து, ஊமை விழிகள், உழவன் மகன், செந்தூரப்பூவே என ஹாட்ரிக் ஹிட் அடித்தவர். மூன்று படங்களிலும் அவருக்கு பெருந்துணையாக நின்றவர், விஜயகாந்த்.
நான்காவது படமாக இணைந்த கைகள் படத்தை தயாரிக்க முயன்ற ஆபாவாணனுக்கு விஜய்காந்த் தான் சாய்ஸ் ஆக இருந்தது. ஆனால், தொடர்ந்து மூன்று படங்களில் விஜயகாந்தை வைத்து எடுத்ததால் தான் படம் ஓடியது; இவரால் வேறு நபரை வைத்து படத்தை ஓட வைக்க முடியாது என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது. மீண்டும் தன்னை நிரூபிக்க முயற்சித்த ஆபாவாணன், விஜயகாந்த்திற்கு பதிலாக வேறு நடிகர்களை வைத்து இணைந்த கைகள் படத்தை எடுக்க திட்டமிட்டார்.
அதன் படி, தனது நண்பரான ரகுவரனை தேர்வு செய்தார். ஆனால் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட, ரகுவரன் அதிலிருந்து விலகினார். பின்னர் தன்னுடன் திரைப்பட கல்லூரியில் படித்த இளம் நடிகர்களான, அருண்பாண்டியன் மற்றும் ராம்கியை படத்தில் இணைத்தார் ஆபாவாணன். ஏற்கனவே ஊமை விழிகள் படத்தில் அருண்பாண்டியனும், செந்தூரப்பூவே படத்தில் ராம்கியும் நடித்திருந்ததால், அவருக்கு அவர்கள் எளிதாக இருந்தனர்.
அத்தோடு நிற்காமல், தனது நெருங்கிய நண்பரான ஒளிப்பதிவாளர் என்.கே.விசுவநாதனை, இப்படத்தின் இயக்குனராக அறிமுகம் செய்து, அவரையே ஒளிப்பதிவையும் கவனிக்க வைத்தார் ஆபாவாணன். இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக படமெடிக்கப்பட்ட நிலையில், படத்தின் பாதியில் கதை மீது ஆபாவாணனுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துள்ளது. இதனால், கவலை கொண்ட அவர், எப்படியாவது படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கூடுதல் செலவுகளை செய்துள்ளார்.
படம் முடிந்து ரிலீசிற்கு தயாராக இருந்த போது, உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யலாம் என சிலர் யோசனை கூறியுள்ளனர். பெரிய அளவில் அதற்கு தயங்கியுள்ளார் ஆபாவாணன். அதற்கு முன், எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் தான், வெளிநாட்டு ரிலீஸ் முறை இருந்துள்ளது. அதுவும் சில காரணங்களுக்காக ரத்து செய்யப்பட, அதன் பின் நீண்ட இடைவெளிக்குப் பின், பழைய முறையில் வெளிநாட்டில் ரிலீஸ் செய்யும் முறையை தொடங்கி வைத்தது இணைந்த கைகள்.
1990 ஆகஸ்ட் 2ல் இந்தியா மட்டுமல்லாமல், அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், கனடா என பல நாடுகளில் வெளியானது இணைந்த கைகள். மும்பையில் திரையிடப்பட்ட தியேட்டர் ஒன்றில், கூட்டம் கட்டுக்கடங்காமல் ஏற்பட்ட மோதலில் தியேட்டரே அடித்து நொறுக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. மும்பையில் பொதுவாக ஓரிரு வாரங்கள் தான் தமிழ் சினிமாக்கள் திரையிடப்படும்; அதுவும் ஓரிரு காட்சிகளாக. ஆனால், தொடர்ந்து 4 காட்சிகளாக 84 நாட்கள், மும்பையில் ஓடிய திரைப்படம் இணைந்த கைகள்.
மும்பை ட்ரைவின் தியேட்டரில் இந்தி, ஆங்கில திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்படும் நிலையில், நம்பி என்பவர், இணைந்த கைகள் திரைப்படத்தை வாங்கி திரையிட்டுள்ளார். கணிசமான டிக்கெட் கட்டணத்தில் படம் திரையிடப்பட்டது. ஆனால், அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் வர, தியேட்டரில் கலவரம் வெடித்து, தியேட்டர் அடித்து நொருக்கப்பட்டது. அந்த தியேட்டரில் முதலில் வெளியான தமிழ் படமும், கடைசி தமிழ் படமும் இணைந்த கைகள் தான். அதை விட முக்கியம், அந்த கலவரத்திற்குப் பின் அந்த தியேட்டர் திறக்கப்படவே இல்லை.
வெளிமாநிலத்திலேயே இந்த நிலை என்றால், தமிழ்நாட்டில் எப்படி இருந்திருக்கும்? கோவை மேட்டுப்பாளையத்தில் ரஜினியின் ராஜாதி ராஜா திரைப்படத்தின் ரெக்கார்டை முறியடித்து அதிக நாட்கள் ஓடியது இணைந்த கைகள். பழநியில் கரகாட்டகாரன் படத்தின் வசூலை முறியடித்தது இணைந்த கைகள். பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, திரையிடப்பட்ட இணைந்த கைகள், அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தியது.
கியான் வர்மாவின் இசையும், பிரசன்னகுமாரின் வசனமும், அசோக் மேத்தாவின் எடிட்டிங்கும் படத்திற்கு பெரிய பெரிய பலமாக அமைந்தது. கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் கச்சிதமாக பொருந்தி போக, இணைந்த கைகள், இன்றும் வேறு யாரும் இணைய முடியாத அளவிற்கு பெரிய வெற்றியை பெற்றது.