வாழ்க்கையில ஜாலியா இருக்கணுமா? இதுதாங்க அந்த 2 டிப்ஸ்.. நிழல்கள் ரவி சொன்ன ரகசியம்!
உண்மையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நமக்குள் தான் இருக்கிறது. அந்த மகிழ்ச்சியை எட்டுவது எப்படி எனக் கூறுகிறார் நடிகர் நிழல்கள் ரவி.
வாழ்க்கையில் மகிழ்ச்சி.. இதுதான் நம் அனைவரின் அல்டிமேட் இலக்கு. ஆனால் மகிழ்ச்சியோ, நிம்மதியோ அதை நாம் எப்போதும் கடைபண்டம் போல் வெளியில் தான் தேடுகிறோம். உண்மையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நமக்குள் தான் இருக்கிறது. அந்த மகிழ்ச்சியை எட்டுவது எப்படி எனக் கூறுகிறார் நடிகர் நிழல்கள் ரவி.
நிழல்கள் ரவி
ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர், டப்பிங் ஆர்டிஸ்ட் எனப் பலமுகம் உண்டு நிழல்கள் ரவிக்கு.
அவர் யூடியூப் தளத்திற்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் இருந்து,
நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும். ஒன்று நம்மை நாம் யாருடனும் ஒப்பிடக் கூடாது. அப்படி ஒப்பிட்டு அவர் அப்படி இருக்கிறார், நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்று யோசிக்க ஆரம்பித்தாலே அவ்வளவு தான் எல்லாம் முடிந்துவிடும். பிபி, சுகர் என நோய்கள் வரிசைக் கட்டி வந்துவிடும். நமக்கு இறைவன் எதைக் கொடுத்திருக்கிறாரோ அதில் நாம் நிம்மதியைத் தேட வேண்டும். அதுதான் நம் வாழ்வின் மகிழ்ச்சிக்கு முதல் வழி.
இரண்டாவது விஷயம், நமக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிடவே கூடாது. அந்த வாய்ப்பில் எப்படி முன்னேறலாம் என்று பார்க்க வேண்டுமே தவிர அதில் ஏதாவது குறை கண்டுபிடித்து அதை நழுவவிட்டுவிடக் கூடாது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நாம் நிலையான மகிழ்ச்சியை உறுதி செய்வதற்கான வழி.
சத்யராஜ், பிரபு
அன்றாடம் நாம் தூங்கி எழுவதே ஒரு ஆசிர்வாதம் தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடத்தைத் தரும். ஒவ்வொரு கடின காலமும் ஒரு பாடத்தை தரும். அந்தப் படிப்பினையை எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் நிம்மதி காணலாம்.
திரையுலகில் எனக்கு சத்யராஜ், பிரபு ரொம்பப் பிடிக்கும். சத்யராஜ் இயற்பெயர் ரங்கராஜ். அவர் வீடு எங்கள் வீட்டுக்கு அடுத்த தெருவில் தான் இருந்தது. அவரது உயரத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்படுவேன். அந்த உயரம் அவர் மனதிலும் உண்டு. அவர் ஒரு ஜென்டில்மேன். அதே போல் அவர் எதையும் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேச மாட்டார். எப்பவுமே ரொம்ப ரொம்ப ஃபிராங்காக இருப்பார். அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.
பிரபுவும் அப்படித்தான். அவர் அன்பும், அவர் வீட்டு விருந்தோம்பலும் மறக்கவே முடியாது. ஏதாவது டென்ஷனாக இருந்ததை உணர்ந்தால் வாங்க முதலில் சாப்பிடுவோம் ரவி என்பார். எனக்கு சிவாஜி சாருடன் அவர் வீட்டில் சாப்பிடும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. அவர் அப்படி கவனிப்பார். ஏய்.. ரவிக்கு இன்னொரு தோசை போடு என்று சொல்வதிலேயே ஒரு தந்தையின் அன்பு தெரியும். திரையுலகில் நிறைய நண்பர்கள் இப்படி இருக்கின்றனர். இத்தனை ஆண்டுகளில் திரையுலகில் நான் பெற்றதும், கற்றத்தும் நிறைய நிறைய இருக்கின்றன. ஆனால் இன்றும் ஒரு நாள் சூட்டிங் போனால் புதிதாக நான் கற்றுக் கொள்கிறேன். வாழ்க்கை முழுக்க இப்படி கற்றல் இருந்து கொண்டே இருக்கும்.
இவ்வாறு நிழல்கள் ரவி வாழ்க்கையில் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்க மிக எளிய டிப்ஸ்களைக் கொடுத்துள்ளார்.