‛‛பொறுத்தது போதும் பொங்கி எழு “ - மெய்சிலிர்க்க வைக்கும் கலைஞரின் ‛டாப் 5’ திரைப்படங்கள்!
”அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் ?” போன்ற வசனங்கள் வரையறுத்து வைக்கப்பட்டிருந்த பல கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டன.
தமிழ் சினிமாவில் சமஸ்கிருத மொழியின் தாக்கமும் , மூட நம்பிக்கையூட்டும் வசனங்களும் கோலோச்சியிருந்த காலம் அது. தனது வசனங்கள் தமிழ் சினிமாவின் பிம்பத்தையே தலைகீழாக புரட்டிப் போட போகிறது என்பதை அந்த 20 வயது இளைஞரான மு. கருணாநிதி அறிந்திருக்கவில்லை. அரசியல் களத்தில் மட்டுமல்லால் திரைக்கடலிலும் திரவியம் தேடியவர் அவர். முதன் முதலில் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘ராஜகுமாரி’ என்ற திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் காலடி வைத்தார். பகுத்தறிவு சிந்தையூட்டும் வசனங்களை தமிழ் சினிமா இறுகப்பற்றிக்கொண்டது. ”அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் ?” போன்ற வசனங்கள் வரையறுத்து வைக்கப்பட்டிருந்த பல கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டன. அப்படி தன் தூரிகையால் கலைஞர் வரைந்த வசன ஓவியங்கள் காலத்தால் அழியாதவை!. அனல் பறக்கும் அவரின் வசனங்களில் பார்க்க வேண்டிய சில திரைப்படங்கள் இதோ!
மந்திர குமாரி
1950 ஆண்டு வெளியான இந்த படத்திற்கு கலைஞர் கதை, வசனம் எழுதியிருந்தார். தளபதி வீரமோகன் (எம்.ஜி.ஆர்), ராஜகுரு (நம்பியார்), கொள்ளையன் பார்த்திபன்( எஸ்.ஏ.நடராஜன்) இளவரசி (சகுந்தலா) மந்திாிகுமாாி (மாதுரி தேவி ) ஆகியோரை சுற்றியே இதன் திரைக்கதை பயணிக்கும் . பகலில் ராஜகுருவின் மகனாக இருக்கும் பார்த்திபன் , இரவில் கொள்ளையனாகவும் இருக்கிறார். அவர் மந்திரகுமாரியை ஏமாற்றி திருமணமும் செய்துக்கொள்கிறார். அந்த கொள்ளையன் யார் என்பதை கதாநாயன் தளபதி வீரமோகன் எப்படி தேடி கண்டுபிடிக்கிறார். அப்போது பார்த்திபன் சிறைக்கு செல்லும் பொழுது பேசும் வசனங்கள் ஆராவாரங்களை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். குறிப்பாக அமைச்சர் விசாரணையின் பொழுது குற்றவாளி என பார்த்திபனை அழைப்பார், அதற்கு அவர் “ பார்த்திபன் என அழையுங்கள் , விசாரணை முடிவதற்குள் குற்றவாளி என அழைக்க எந்த சட்டம் கூறுகிறது “ என்பார். இறுதியில் கொள்ளையன் பார்த்திபன் தனக்கு தானே வாதாடி சாதகமான தீர்ப்பும் பெற்று விடுகிறார். ஆனால் தனது கணவன் ஒரு கொடூர கொள்ளையன் என்ற உண்மையை அறிந்த அவரது மனைவியாலேயே பார்த்திபன் கொல்லப்படுவதாக கதை அமைந்திருக்கும். கணவனே மனைவியை கொல்வது போல அமையும் இந்த திரைப்படத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என விரல் நகத்தை கடித்துக்கொண்டிருந்த படக்குழுவிற்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக படத்தை கொண்டாடினார்கள் மக்கள்.
பராசக்தி
1952 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுக நடிகர். அவரது துடிப்பும், கலைஞரின் வசனமும் மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும். பராசக்தி படத்தின் வசனங்கள் அனைத்தும் காலம் கடந்தும் இன்றும் உயிர்ப்புடன்தான் உள்ளது. வறுமையில் இருக்கும் இளைஞரான சிவாஜி சாலை ஓரத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருப்பார், அவரை தட்டி எழுப்பும் காவலர்கள் “ டேய் நீ பிட் பாக்கெட்டா” என கேட்க “இல்லை எம்டி பாக்கெட்” என்பார். நீதிமன்றத்தில் வழக்காடும் பொழுது, “உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.” என்பார். இத்தைகய ஆழமான வசனங்களை செதுக்க கலைஞர் ஒருவராலேயே முடியும்.
மனோகரா
பம்மல் சம்பந்த முதலியாரின் புகழ் மிக்க நாடகம் இது. இதற்கு திரைக்கதையும் வசனமும் எழுதினார் கலைஞர் கருணாநிதி. 1954 இல் வெளியான இந்த திரைப்படம் இன்றளவும் பிரபலம் . சிவாஜி கணேசன், கிரிஜா, டி.ஆர்.ராஜகுமாரி, கண்ணாம்பா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். கதாநாயகனுக்கு நிகராக, கதாநாயகனின் தாய்க்குமான வசனங்களை எழுதியிருப்பார் கலைஞர். அதில் “பொறுத்தது போது பொங்கி எழு மனோகரா “ என்னும் வசனம் இன்றளவும் பிரபலம். தாய் மற்றும் மகனை விடுத்து, வேறு ஒரு பெண்ணுடன் பழகும் அரசனிடம் மகனும் இளவரசனுமான சிவாஜி கேள்வி எழுப்புவது போன்ற காட்சிகளுக்கான வசனங்கள் ரசிகர்களை கொண்டாட வைத்தது.
பூம்புகார்
1965 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், சிலப்பதிகார நூலை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. கோவலன் , கண்ணகி , மாதவி இவர்களை சுற்றி நகரும் படத்தின் முதல் பாதி. மாதவியிடம் மயங்கியிருக்கும் கோவலன் , தனது செல்வங்களை எல்லாம் இழந்த பின்னர், திருந்தி மீண்டும் கண்ணகியிடம் வந்து , திருந்தி வாழ ஆசைப்படுகிறார். அதனால் வியாபாரம் தொடங்குவதற்காக தனது மனைவியில் கால் சிலம்பை எடுத்துக்கொண்டு பாண்டிய நாடு செல்கிறார். ஆனால் அங்கு பாண்டி நாட்டி அரசியின் கால் சிலம்பை காணவில்லை என கோவலனை கைது செய்கின்றனர். அவரது உயிரும் பிரிகிறது. தனது கணவனை தேடி வரும் கண்ணகி , உண்மை அறிந்து பாண்டிய மன்னனிடம் தலைவிரி கோலத்தில் ஆவேசமாக சூளுரைப்பது போன்ற வசங்கள் மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும். “கள்வன்? என் கணவன் கள்வனா? அவரைக் கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர். நல்லான் வகுத்ததா நீதி? இந்த வல்லான் வகுத்ததே நீதி.” என ஆரமிக்கும் கண்ணகியின் பேச்சு பாண்டிய மன்னனை மட்டுமல்ல பார்பவரையும் கண்கலங்க வைத்துவிடும்.
மறக்க முடியுமா?
1966 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை “அரும்பு முதல் கருகிய மலராகும் வரை அல்லல்ப்பட்டு அழிகின்ற பெண் ஒருத்தியின் கண்ணீரால் தீட்டப்பட்டதே இந்த சரித்திரம் “ என்பார் கலைஞர் . இளம் வயதில் தனது சகோதரர்களை பிரிந்துவிடும் இளம்பெண் வாழ்க்கையில் இன்னல் படுகிறார்.
பின்னர் ஒரு நாள் குடிபோதையில் அந்த பெண்ணை கதாநாயகன் அனுக, தனது சகோதரன் என அறிந்த பெண் அதனை புரிய வைக்கிறாள். அங்கு இடம்பெறும் ‘காகித ஓடம் ’ என்ற வரிகளை கலைஞர் அத்தனை நேர்த்தியாக எழுதியிருப்பார்.