Vidaa Muyarchi: டைட்டில் விட்டு 300 நாளாச்சு.. விடாமுயற்சி அப்டேட் என்னாச்சு.. அஜித் ரசிகர்கள் போராட்டம்!
விடா முயற்சி படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா சாண்டா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் வித்தியாசமான போராட்டங்களை தொடங்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் கடந்தாண்டு துணிவு படம் வெளியானது. சூப்பர் ஹிட்டாக அமைந்த இப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போதே இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் அஜித் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து துணிவு படம் வெளியான பிறகு இந்த படம் தொடங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. விடா முயற்சி என டைட்டிலும் அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென விக்னேஷ் சிவன் கழற்றி விடப்பட்டார்.
அவரின் கதை தயாரிப்பு நிறுவனத்தை கவரவில்லை என கூறப்பட்டதால் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து விடா முயற்சி படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா சாண்டா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். அனிருத் விடாமுயற்சி படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்தது.
மகிழ்திருமேனி இயக்குநராக அறிவிக்கப்பட்டு கடந்த மே மாதம் அப்டேட் வெளியானது. அப்போது அஜித் பைக்கில் உலக சுற்றுலா மேற்கொண்டிருந்ததால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒருவழியாக படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கலை இயக்குநராக பணியாற்றிய மிலன் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பில் பின்னடைவு ஏற்பட்டது. இதன்பின்னர் அஜர்பைஜானில் கடுமையான குளிர் நிலவியதால் படக்குழுவினர் சென்னை திரும்பினர். இதற்கிடையில் தான் அந்நாட்டில் நடைபெற்ற ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
ஆனால் சென்னை திரும்பிய பின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவதில் எந்தவித அறிகுறியும் இல்லாததால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர். மே மாதம் 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளுக்கு விடாமுயற்சி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நிச்சயம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேசமயம் அஜித்தின் பேச்சைக் கேட்டு விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியதில் இருந்து அப்டேட் கேட்காமல் ரசிகர்கள் அமைதியாக இருந்தனர்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல பிறநடிகர்களின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகள் வெளியாகி கொண்டிருப்பதால் அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். விஜய், ரஜினி,கமல்ஹாசன் என அத்தனை தமிழ் முன்னணி நடிகர்களின் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம், அடுத்து நடிக்கப்போகும் படம் என அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அஜித்தின் விடா முயற்சி படம் 300 நாட்களை கடந்தும் அப்டேட் வராமல் உள்ளது.
சமீபத்தில் அஜித் நடித்த வாலி படம் ரீ-ரிலீஸான நிலையில் புதுச்சேரியில் அப்படம் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள், “லைக்காவை காணவில்லை.. விடாமுயற்சி அப்டேட் விட்டு 300 நாளாச்சு. படத்தோட அப்டேட் என்னாச்சு.. கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்” என பேனர் கொண்டு வந்து நூதன முறையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.