Gambhir Samson: ”என்னமா உருட்டுற மேன் நீ” சாம்சனை பாராட்டிய கம்பீர் - சண்டைக்கு வந்த நெட்டிசன்கள்
Gambhir Samson: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை பாராட்டிய, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Gambhir Samson: சஞ்சு சாம்சனுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்காததே, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் என குற்றம்சாட்டுகின்றனர்.
வரலாறு படைத்த சஞ்சு சாம்சன்:
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வதற்கான மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில், சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் அதிகபட்ச சேஸிங் இதுவாகும். அதோடு, உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய வீரரின் இரண்டாவது அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை அடித்த வீரர், என்ற பெருமையை சாம்சன் (97 ரன்கள்) பெற்றார். ப்ளேயிங் லெவனில் அவருக்கான இடம் என்பதே கேள்விக்குறியாக உள்ள நிலையில், கிடைத்த வாய்ப்பில் மிக முக்கியமான போட்டியில் தனி ஆளாக வெற்றியை உறுதி செய்த சாம்சனை பல்வேறு தரப்பபினரும் பாராட்டி வருகின்றனர்.
சாம்சனை பாராட்டிய கம்பீர்
போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், “சஞ்சு சாம்சன் உலகத் தரம் வாய்ந்த வீரர், அவர் எப்படிப்பட்ட வீரர் என்பது அனைவருக்குமே தெரியும். அவருக்கு தேவையான ஆதரவு கொடுக்க வேண்டியதே அவசியமாக இருந்தது. அணிக்கான தேவை ஏற்படும்போது அவர் தன்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்துவார். இன்றைய நாள் இத்தகையது. அவர் எந்தவொரு நேரத்திலும் தனது இன்னிங்ஸை வேகப்படுத்தவில்லை. அவை வெறும் வழக்கமான கிரிக்கெட் ஷாட்கள் தான். அவர் எப்போது பந்தை முரட்டுத்தனமாக விளாசமாட்டார். அத்தகைய திறமையான வீரர் அவர். நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு மோசமான நேரத்தை கொண்டிருந்தார். அவர் மீதான அழுத்தத்தை குறைக்க அவருக்கு சிறிது இடைவெளி தேவைப்பட்டது. உலகக் கோப்பையில் அவரது பங்களிப்பு தேவைப்படும்போது, சாம்சன் அதை செய்வார் என எங்களுக்கு எப்போதும் தெரியும்” என கம்பீர் பேசினார்.
”சண்டைக்கு இழுக்கும் நெட்டிசன்கள்”
சஞ்சு சாம்சனை கம்பீர் பாராட்டி பேசி இருப்பது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்லப்பிள்ளை கில்லிற்காக சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கையையே முடித்துவிட பார்த்துவிட்டு, தற்போது இப்படி பேச வெட்கமாக இல்லையா என கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். நல்ல ஃபார்மில் வெளிநாட்டு மண்ணில் கூட சதம் விளாசி கொண்டிருந்த சாம்சனை, எந்தவொரு காரணமும் இன்றி ப்ளேயிங் லெவனில் சேர்க்காதது ஏன்? அபிஷேக் சர்மா அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் டக்-அவுட் ஆன போது கூட, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்காதது ஏன்? ஆதரவு கொடுக்க வேண்டியது மட்டுமே தேவையாக இருந்தது என பேசுகிறீர்களே, உண்மையிலேயே நீங்கள் எப்போது சாம்சனிற்கு ஆதரவாக இருந்தீர்கள்? விளையாட்டில் உங்களது அரசியலை கலந்து கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் போன்ற பல திறமையான வீரர்களை ஓரங்கட்டி இருக்கிறீர்களே? என அடுக்கடுக்கான கேள்விகளை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.





















