21 Years of Gemini: ஜெயிக்காது என நினைத்த சரண்.. மொட்டை போட்ட ஏவிஎம் சரவணன்.. மெஹா ஹிட் “ஜெமினி” படம் உருவான கதை..!
நடிகர் விக்ரமின் சினிமா கேரியரில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஜெமினி படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் ஆகிறது.
நடிகர் விக்ரமின் சினிமா கேரியரில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ஜெமினி படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் ஆகிறது.
காதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், அல்லி அர்ஜூனா ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சரணின் 5வது படமாக வெளியானது “ஜெமினி”. ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ஹீரோயினாக கிரண் நடித்திருந்தார். மேலும் கலாபவன்மணி, மனோரமா, வினு சக்கரவர்த்தி, சார்லி,வையாபுரி, தாமு, முரளி, தென்னவன் என பலரும் நடித்திருந்தனர். பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் விக்ரமின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து அவரை கமர்ஷியல் ஹீரோவாக உயர்த்தியது. இந்த படம் உருவான கதையை நேர்காணல் ஒன்றில் இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார்.
ஜெமினி படம் உருவான கதை
ஜெமினி படத்துக்கு முன்னாடி விக்ரமை நான் டப்பிங் ஸ்டூடியோவில் சந்தித்துள்ளேன். அப்ப அவர் நடிகராகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்தார். சேது, காசி படங்கள் வந்த பின் அவரின் திரைப்பாதை மாறியது. பார்த்தேன் ரசித்தேன் ஷூட்டிங் பெசன்ட் நகரில் நடந்தது. அப்போது சின்ன குழந்தையான த்ருவ்வை அழைத்துக் கொண்டு விக்ரமின் மனைவி என்னை காண வந்தார். “கமர்ஷியல் இயக்குநரான நீங்கள் விக்ரமை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும்” என சொன்னார். எனக்கும் விக்ரமை வைத்து படம் பண்ண வேண்டும் என விருப்பம் இருந்தது.
எனக்கு மகன் பிறந்த போது அவனை பார்க்க மருத்துவமனை சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு போன் கால். ஏவிஎம் சரவணன் பேசினார். உங்களை சந்திக்க வேண்டும் என்றார். நானும் விஷயத்தை சொல்லி விட்டு மறுநாள் வீட்டுக்கு சென்றேன். அப்போது விக்ரமின் கால்ஷீட் இருக்கு. படம் பண்னனும் என சொன்னார். நானும் உடனே ஓகே என சொன்னேன்.
பின் வெளியூரில் படப்பிடிப்பில் இருந்த விக்ரமை தொடர்பு கொண்டு எப்போது சென்னை வருகிறீர்கள். சந்திக்க வேண்டுமென சொன்னேன். கதையின் ஒன்லைன் சொல்ல வேண்டுமென கூறினேன். விக்ரம் சென்னை வந்ததும் சந்திப்பதாக கூறிவிட்டு ஒன்லைன் உடனே சொல்ல முடியுமா என கேட்டார். நானும் சொல்லிட்டேன்.
ஏவிஎம் நிறுவனத்தை கேள்வி கேட்ட சரண்
உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட அந்த கதையை சொன்னேன். கதை சொன்னபோது இப்படத்தில் கிரண், கலாபவன் மணி என யாருமே கிடையாது. இந்த படம் அட்வான்ஸ் வாங்கிய உடன் ஏவிஎம் நிறுவனத்தினரிடம் 10 கேள்விகளை எழுப்பினேன். அவர்கள் அனைத்திற்கும் சரி என சொன்னார்கள்.
முதலில் ஜெமினி படத்தில் வில்லனாக பொன்னம்பலத்தை பண்ணலாமா என யோசித்தேன். பின் இந்தி பட வில்லன் இருவரை நடிக்க வைக்கலாமா என நினைத்தேன். ஆனால் எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. ஆனால் ஜெமினி படம் எளிமையான கதை. அதை சரியாக கொடுக்காமல் விட்டால் மசாலா படமாக மாறி விடும். அதை வேறுபடுத்தி காட்டவே வட இந்திய பெண் கேரக்டர் உள்ளிட்ட பல காட்சிகள் வைக்கப்பட்டது. வட இந்திய குடும்பம், மாலை நேர கல்லூரி என என் வாழ்க்கையில் நடந்ததை கதையில் இணைத்தேன்.
நடிக்க மறுத்த கலாபவன் மணி
அப்போது தான் என் மனைவி தான் கலாபவன்மணியை சொன்னார். அவரை நடிக்க வைக்கலாம் என ஐடியா சொன்னார். அவர் அந்நேரம் ஒரு மேடையில் மிமிக்ரி பண்ணதை பார்த்து சரி பேசி பார்க்கலாம் என முடிவு செய்தேன். ஆனால் அவரோ தமிழ் படமா வேண்டாம் என மறுத்தார். நான் கனவில் கூட நினைக்காத ஒரு சம்பளத்தை கேட்கிறார். ஆனால் கலாபவன் மணியின் மிமிக்ரி திறமையை நேரில் கேட்ட பின் பிக்ஸ் செய்தேன். கிரணுக்கு லுக் டெஸ்ட் எடுத்த உடனே ஓகே செய்தேன்.
கிட்டதட்ட மின்சார கனவுக்கு பிறகு ஏவிஎம் நிறுவனம் படம் எடுத்ததால் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்த படத்தை முடித்து பார்க்கும் போது பண்ணிய அனைத்தும் வேஸ்ட் என்பது போல இருந்தது. எதுவும் நான் நினைத்த மாதிரி வரவில்லையோ என தோன்றியது.
ஓ போடு பாடல் உருவான விதம்
இதற்கிடையில் வேகமாக செல்லும் பீட்டில் எனக்கு பாடல் தேவைப்பட்டது. பரத்வாஜ் வடிவேலு பாடலுக்காக கம்போஸ் செய்த இசையில் ஒன்றை அனுப்பி ஓகேவா என கேட்டார். நான் ஒரே மாதிரி ஃபாஸ்ட் பீட்டாக செல்வதால் நடுவில் பிரேக் ஆகும் வகையில் “ஓ போடு” என்ற வார்த்தையை சேர்க்க சொன்னேன். அந்த பாடல் ஹிட் ஆகும் என சொன்னது ஏவிஎம் சரவணன் மட்டும் தான். அந்த பாடல் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் அங்கு வேடிக்கை பார்க்க வருவார். அவருக்கு அந்த பாடல் ரொம்ப பிடித்து இருந்தது.
எனக்கும் ஏவிஎம் சரவணனுக்கு ஜெமினி படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையே இல்லை. அவர்களின் முந்தைய தயாரிப்புகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் எதுவும் பொருந்தவில்லை. எனக்கு தெரிந்து படம் வெற்றியடைய வேண்டுமென ரிலீசுக்கு முன்னாடி திருப்பதி போய் மொட்டையடித்து கொண்டார். நாங்க ப்ரிமீயர் ஷோக்காக சிங்கப்பூர் சென்று விட்டோம். அப்போது தான் இங்க படம் ஹிட்டுன்னு எங்களுக்கு போன் வந்தது.