Akash Baskaran: பட்டாஸ் கிளப்பிய ஆகாஷ் பாஸ்கரனுக்கு பயம் காட்டிய அமலாக்கத்துறை! பின்னணி என்ன?
இட்லி கடை, பராசக்தி போன்ற படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் இன்று காலை அதிரடியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய வீடு மட்டுமின்றி அவருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?
'டான் பிக்சர்ஸ்' நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரன் பின்னணி கொஞ்சம் அரசியல் பின்னணி கொண்டது. அதாவது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் உயிர் நண்பன் தான் இந்த ஆகாஷ் பாஸ்கரன்.
உறவு முறை:
நண்பர்கள் என்பதை தாண்டி, இவர்கள் தற்போது உறவினர்களாகவும் மாறியுள்ளார். கவின்கேர் குழுமத்தின் நிறுவனரான. சிகே ரங்கநாதனின் 3 ஆவது மகள் தாரணியை ஆகாஷ் பாஸ்கரன் தான் திருமணம் செய்து கொண்டார்.
முதல்வர் முக ஸ்டாலினின் சகோதரி தேன்மொழியின் கணவர் தான் இந்த சிகே ரங்கநாதன். எனவே நட்பு உறவையும் தாண்டி, முதல்வர் வீட்டு மருமகனாகவும் மாறி இருக்கிறார்.

திருமணம்:
ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தாரணி திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் சிம்பு, தனுஷ், நயன்தாரா, சிவகார்த்திகேயன், அட்லீ, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.
திரைப்படங்கள்:
டான் பிக்சர்ஸ் நிறுவனம் துவங்கி மிக குறுகிய நாட்களிலேயே, அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் 4 படங்களை தயாரித்து வருகிறார். அதில் ஒன்று இதயம் முரளி. இந்தப் படத்தின் மூலமாக அவர் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.
இந்தப் படம் மட்டுமின்றி சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி, தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தையும், சிம்புவின் எஸ்டிஆர் 49 படத்தையும் தயாரிக்கிறார். பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பிரித்வி ராஜன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி:
மிக குறுகிய காலத்தில் ஆகாஷ் பாஸ்கரன் 4 பிக் பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறார். குறிப்பாக ஒரே வருடத்தில் 600 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ள நிலையில், இதற்கான ஆவணங்கள், சரியாக உள்ளதா என்றும், பண மோசடி, அந்நியச் செலாவணி மீறல்கள் மற்றும் பிற பொருளாதார குற்றங்கள் ஏதேனும் நடந்துள்ளதா? என்பது பற்றிய விசாரணைக்காக இந்த சோதனை நடந்துள்ளது.




















