ரம்பா சார்.. ரம்பா நடிக்க வந்தது எப்படி தெரியுமா? பள்ளியில் நடந்த அந்த சம்பவம்தான் காரணம்!
Actress Rambha: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக உலா வந்த ரம்பா நடிக்க வந்தது எப்படி என்பதை கீழே காணலாம்.

தமிழ் திரையுலகம் பல கதாநாயகிகளை இதுவரை கண்டிருந்தாலும் அவர்களில் சில கதாநாயகிகள் மட்டுமே எப்போதும் ரசிகர்கள் மனதில் ஆழமாக குடி கொண்டிருப்பார்கள். அவ்வாறு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் எவர்கிரீன் நாயகியாக இருப்பவர் ரம்பா.
கோலிவுட்டின் மர்லின் மன்றோ ரம்பா:
அவர் எப்படி சினிமாவிற்கு நடிக்க வந்தார் என்பதை கீழே விரிவாக காணலாம். தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்தி, பிரபு, சரத்குமார், விஜய், அஜித், பிரபுதேவா, அர்ஜுன், சத்யராஜ் உள்ளிட்ட பலருடன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
நடிக்க வந்தது எப்படி?
90, 2000 காலகட்டத்தில் தமிழில் முன்னணி நடிகையாக உலா வந்த ரம்பா சினிமாவிற்கு நடிக்க வந்தது எப்படி? என்பதை கீழே காணலாம். ரம்பா 1976ம் ஆண்டு ஜுன் 5ம் தேதி ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் பிறந்தவர். இவரது இயற்பெயர் விஜயலட்சுமி. இவர் விஜயவாடாவில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். அப்போது, அவர்களது பள்ளியில் கலைநிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.
அப்போது, அந்த கலைநிகழ்ச்சியில் பெண் தெய்வம் ஒன்றின் வேடம் தரித்து ரம்பா நடித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் ரம்பாவின் கெட்டப் மற்றும் நடிப்பு அனைவரையும் அசரவைத்துள்ளது. அதே நிகழ்ச்சிக்கு இயக்குனர் ஹரிஹரன் வந்துள்ளார். அவர் பின்னாளில் தான் மலையாளத்தில் இயக்கிய சர்கம் என்ற படத்திற்கு நாயகியாக ரம்பாவை தேர்வு செய்தார். 1992ம் ஆண்டு மலையாளத்தில் முதன்முதலில் நாயகியாக அறிமுகமான ரம்பாவிற்கு அவர்கள் அம்ருதா என்று பெயர் சூட்டி அறிமுகப்படுத்தினர்.
தமிழில் அசத்தல்:
பின்னர், அதே ஆண்டு ரம்பா ஆ ஒக்கட்டி அடக்கு என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படத்தில்தான் அவருக்கு அம்ருதா என்ற பெயருக்கு பதிலாக ரம்பா என்று பெயர் சூட்டப்பட்டது. அதன்பின்பு, ரம்பா தமிழிலும், தெலுங்கிலும் மிகப்பெரிய நடிகையாக உலா வரத் தொடங்கினார். 1993ம் ஆண்டு பிரபுவின் உழவன் என்ற படம் மூலமாக அறிமுகமானார். பின்னர், அதே ஆண்டு வெளியான உள்ளத்தை அள்ளித்தா என்ற படம் மூலமாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.
இந்த படத்திற்கு பிறகு 3 ஆண்டுகளில் ரஜினிகாந்தின் அருணாச்சலம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ரம்பா பல படங்களில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார். செங்கோட்டை படத்தில் மீனா முதன்மை கதாநாயகியாக நடிக்க, ரம்பா இரண்டாவது கதாநாயகியாக நடித்திருப்பார். அருணாச்சலம் படத்திலும் செளந்தர்யா முதன்மை கதாநாயகியாக நடிக்க ரம்பா இரண்டாவது கதாநாயகியாக நடித்திருப்பார்.
தமிழில் இவர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா, ஆனந்தம் உள்ளிட்ட பல படங்கள் மிகவும் பிரபலம் ஆகும். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக உலா வந்தார்.
தெலுங்கு, மலையாளம், இந்தியிலும் அசத்தல்:
தமிழ் தெலுங்கு மட்டுமின்றி இந்தியில் மி்துன் சக்கரவர்த்தி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். கன்னடம், மலையாளத்திலும் பல படத்தில் நடித்துள்ளார். மேலும், பெங்காலி, போஜ்புலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் ரம்பா நடித்துள்ளார். தற்போது அவர் தமிழில் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராக பங்கேற்று வருகிறார்.





















