அவரது போராட்டம் மிகப்பெரியது....இயக்குநராக களமிறங்கும் வனிதா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, நடிக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

வனிதா விஜயகுமார் எழுதி இயக்கியுள்ள மிஸஸ் & மிஸ்டர்
நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. ராஜபாண்டி - விஷ்ணு ராமகிருஷ்ணன் - டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாலகுரு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.
ஜூனில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் நடிகர் அன்பு மயில்சாமி, நடிகை ஃபாத்திமா பாபு, கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், அம்பிகா, பிரவீண் லால் வாணி, ஷகீலா, தனஞ்ஜெயன், வசந்தபாலன், ஸ்ரீகாந்த் தேவா, வனிதா விஜயகுமார், ஜோவிகா விஜயகுமார், தயாரிப்பாளர் மதியழகன், கிரண், ஷார்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், ''வனிதா மேடம் நடிப்பதற்கு வருகை தந்த தருணத்தில் இருந்து தொடர்ந்து அவர்களை பார்த்து வருகிறேன். அவர்களுடைய போராட்டம் மிகப்பெரியது. ஒரு பெண்ணாக அவர் எதிர்கொள்ளும் சவால்களும் பெரியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த சமூகம் அவர் மீதான விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. இதையும் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.
வனிதாவின் போராட்டம்
நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அவரும் இடம்பெற்று, அவருடைய சொந்த வாழ்க்கை பற்றிய பல விபரங்களை பகிர்ந்து கொண்டார். அதன் போது அவர்கள் கண்ணீர் வடித்ததையும் நான் பார்த்திருக்கிறேன். இன்றும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணை ஒடுக்கப்பட்ட சமூகமாகத் தான் பார்க்கிறோம். தொடர்ந்து அப்படித்தான் நடத்திக் கொண்டு வருகிறோம். ஒரு பாலினமாக அவர்களை ஒதுக்கி வைத்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் என்ன உடை அணிந்தாலும், என்ன செய்தாலும் அதில் குறையை கண்டுபிடிக்கிறோம். அதில் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நுழைக்கிறோம். எல்லா விசயத்தையும் திணித்து பிரச்சனை கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். அதுபோன்றதொரு இடத்தில் இருந்து வனிதாவின் போராட்டம் என்பது மிகப்பெரியது.
ஒரு ஆண் பத்தாயிரம் மனைவிகளை கூட திருமணம் செய்து கொள்ளலாம். அது தொடர்பாக பெருமிதமாகவும் பேசலாம். இதனை பெருமிதமாக கருதும் சமூகத்தில் இருந்து ஒரு பெண் இதனை செய்யும் போது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கி, அவரை கேலிக்குரிய பொருளாக மாற்றி பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில், இவற்றையெல்லாம் துணிச்சலாக எதிர்கொண்டு அவர் போராடிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. நான் ஒரு இயக்குநராக இருக்கிறேனோ இல்லையோ, ஒரு பெண்ணாக அவர் செய்யும் அனைத்து செயல்களுக்கும் ஒரு ஆணாக ஆதரவு தர விரும்புகிறேன்.
இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. அதிலும் திரைப்படத் துறையில் இருந்து கொண்டு அவர் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம், அதிலும் இங்கு அவர் இயக்குநராக அமர்ந்திருப்பது பெருமையான விஷயம், மகிழ்ச்சிக்குரிய விசயம்.
ஒவ்வொருவருக்கும் செல்வதற்கு அவர்களிடம் கதை உள்ளது. இந்த உலகம் ஒட்டுமொத்தமாக ஆணாதிக்க சமுதாயம். இங்கு பெண்கள் கதை சொல்ல வர வேண்டும் என விரும்புகிறேன்.
தற்போது ஹெர் ஸ்டோரீஸ் என்று ஒரு பதிப்பகம் இருக்கிறது. இந்த பதிப்பகம் நூறு பெண்களின் கதையை சொல்லத் தொடங்கி இருக்கிறது. பெண்கள் இயக்குநராக தங்களது கதையை சொல்ல வேண்டும். அது ஒரு புதிய கதையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். சினிமா - இயக்கம் ஆகியவை ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன் . ஆண்களிடம் மட்டும் சினிமா இல்லாமல் ஒவ்வொருவரும் தங்களுடைய கதைகளை சொல்ல முன்வர வேண்டும். தற்போது யூட்யூபில் வயதான ஒரு பெண்மணி தன் பேரன் / பேத்தியுடன் இணைந்து நடனமாடி அந்த காணொலியை பதிவேற்றம் செய்கிறார்கள். இந்த ஷார்ட்ஸ் (Shorts) உலகத்தை பார்க்கும் போது ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதை காண முடிகிறது. அந்த வகையில் இந்த சமூகத்திற்கு சொல்வதற்கு வனிதாவிடம் கதை உள்ளது. அவர்கள் பேசுவதற்கும் ஒரு கதை இருக்கிறது.
ஷகிலாவிடம் கதை கேட்டால், இதுவரை உலகத்தில் யாரும் சொல்லாத கதை இருக்கும். அந்த கதையை அவரால் சொல்ல முடியும். ஷகிலாவை காமத்துடன் தொடர்பு படுத்தி நாம் பார்க்கும் போது அவரிடம் சொல்வதற்கு அழுத்தமான கண்ணீர் கதைகள் இருக்கின்றன. அது போல் வனிதாவிற்கும் சொல்வதற்கு கதை இருக்கிறது. அந்த கதை தான் மிஸஸ் அண்ட் மிஸ்டர்.
என் இயக்கத்தில் உருவான படத்தில் அவர்கள் நடித்திருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்க்கும் வனிதா விஜயகுமார் வேறு. அவருடன் இணைந்து பணியாற்றும் போது இருக்கும் வனிதா விஜயகுமார் வேறு. அந்தப் பெண் சாதாரண எளிமையான பெண். அதே தருணத்தில் அவர் ஏற்படுத்திக் கொள்கிற திமிர்த்தனம் என்பது, அவரை பாதுகாத்து கொள்கிற ஆயுதமாகத்தான் பார்க்கிறேன். எல்லா பெண்களும் அப்படித்தான்.
எல்லா பெண்களும் திமிராகத்தான் பேசுவார்கள். திமிராகத்தான் நடந்து கொள்வார்கள். அகங்காரம் உடையவர்களாகவும், கர்வம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இதை இந்த ஆணாதிக்க சமூகத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிற ஆயுதமாகத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் வனிதாவிடம் இருக்கும் தைரியம் அப்படிப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் அன்பானவர். அவருக்கு ஆதரவு தெரிவிக்கவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
இப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக தெரிகிறது. இந்த படம் வெற்றி அடைய மனமார வாழ்த்துகிறேன்,'' என்றார்.





















