Sundar C: சுந்தர் சி வெற்றிக்கு காரணமான விஜய் படம்.. காரணத்தை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!
என்னுடைய முதல் படத்தின் தயாரிப்பாளர் ஒரு தியேட்டர் ஓனர். அந்த சமயம் படம் ரிலீசாவதற்கு முன்னாடியே நாங்கள் பார்ப்போம். அப்படி ஒரு படம் அந்த தயாரிப்பாளரின் தியேட்டரில் பார்த்தேன்.
சினிமாவில் தன்னுடைய எண்ணத்தை விஜய்யின் படம் ஒன்று மாற்றியதாக இயக்குநர் சுந்தர்.சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் கமர்ஷியல் படங்கள் எடுப்பதில் வல்லவர் இயக்குநர் சுந்தர்.சி. ஒரு நடிகராகவும் திறமையை வெளிக்கொணர்ந்து வரும் அவர் சமீபத்தில் அரண்மனை படத்தின் 4 ஆம் பாகத்தை இயக்கினார். இப்படம் கடந்த மே 3 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 2024 ஆம் ஆண்டின் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை அரண்மனை 4 படம் பெற்றுள்ளது.
இதனிடையே சுந்தர் சி நேர்காணல் ஒன்றில் விஜய் படம் பற்றி பேசியுள்ளார். அதில், “என்னுடைய முதல் கதையில் டைட்டில் “புரியாமல் பிரிவோம்” என வைத்திருந்தேன். நன்றாக நியாபகம் இருக்கிறது. ரொம்ப சீரியஸான கதையாக இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தான் இருந்தேன். என்னுடைய முதல் படத்தின் தயாரிப்பாளர் ஒரு தியேட்டர் ஓனர். அந்த சமயம் படம் ரிலீசாவதற்கு முன்னாடியே நாங்கள் பார்ப்போம். அப்படி ஒரு படம் அந்த தயாரிப்பாளரின் தியேட்டரில் பார்த்தேன். எனக்கு அந்த படத்தின் மீது ஒரு பெரிய நம்பிக்கையே இல்லை. என்னடா இது படம், ஓடாது என நினைத்தேன். ரிலீசுக்கு முந்தைய நாள் அந்த படம் பார்த்தேன். அடுத்த நாள் முதல் காட்சிக்கு அப்படி ஒரு கூட்டம் தியேட்டருக்கு வந்தது.
அந்த தியேட்டர் 2 ஸ்கிரீன்கள் கொண்டது. முதலில் சின்ன ஸ்கிரீனில் 2 காட்சிகள் போட்டார்கள். பின்னர் 4 காட்சிகளாக அதிகரித்தார்கள். தொடர்ந்து கூட்டம் வரவே பெரிய ஸ்கிரீனிலும் படம் போடுகிறார்கள். எல்லா காட்சியும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பைத்தியம் பிடித்த மாதிரி மறுமறுபடியும் எல்லா காட்சியும் பார்க்கிறேன். சரி முதல் காட்சிக்கு என ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் வந்து கொண்டாடுவார்கள். அதனால் அடுத்த காட்சியின் ரசிகர்கள் மனநிலை மாறலாம் என நினைத்தேன். ஆனால் எல்லா காட்சியிலும் ஒரே மாதிரி குறிப்பிட்ட காட்சியில் கைதட்டல், விசில் அடித்தல் நிகழ்வுகள் எல்லாம் நடந்தது.
அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படமும், அதன் ஹீரோவும் இன்னொரு வகையில் எனக்கு குருநாதராக மாறினார்கள். அந்த படத்தின் பெயர் ரசிகன். அதில் நடித்தவர் தளபதி விஜய். அந்த படம் என்னோட கண்ணோட்டத்தை மாற்றியது. மறுமறுபடி எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. எனக்கு பிடித்த மாதிரி படம் எடுக்க வேண்டுமா.. இல்லை ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி எடுக்க வேண்டுமா என தோன்றியது. எனக்கு பிடித்த மாதிரி என்பதை தாண்டி ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி எடுக்க வேண்டும் என நினைத்தேன். அன்று நான் எடுத்த முடிவு தான் இன்றைக்கு திரையுலகில் என்னை இந்த இடத்தில் உட்கார வைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
ரசிகன் படம்
1994 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் விஜய், சங்கவி, விசித்ரா, ஸ்ரீவித்யா, மனோரமா, கவுண்டமணி, செந்தில் என பலரும் நடித்த படம் “ரசிகன்”. தேவா இசையமைத்த இப்படத்தில் தான் முதல்முறையாக விஜய்க்கு “இளைய தளபதி” என்ற டைட்டில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.